உலகிலேயே மிகவும் காரமானது எனக் கருதப்படும் நாகாலாந்து மாநிலத்தில் விளையும் மிளகாய் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் 'பூத் ஜோலாக்கியா' என்ற அரிய வகை மிளகாய் விளைகிறது. உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் வகை என கருதப்படும் இதற்கு மிளகாய்களின் அரசன் என்ற பெயரும் உண்டு. நாகாலாந்தில் மட்டுமே விளையும் இந்த அரிய வகை மிளகாய்க்கு கடந்த 2008 ஆம் ஆண்டு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மிளகாய் ஏற்றுமதியை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த தகவல் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் நாகாலாந்து மிளகாயை சுவைத்துப் பார்த்தவர்களுக்குத்தான் அது எவ்வளவு காரமானது எனத் தெரியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், நாகாலாந்திலிருந்து 'மிளகாயின் அரசன்' என்று அழைக்கப்படும் மிளகாய் வகை முதன்முறையாக புதன்கிழமை அன்று குவஹாத்தி வழியாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் ஏற்றுமதி ஊக்கம் பெறும் என கருதப்படுகிறது.
வடகிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, ஏற்றுமதி வரைபடத்தில் இந்தப் பகுதியில் உள்ள மாநிலங்கள் இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அபெடா அமைப்பு மேற்கொள்ளும். திரிபுராவின் பலாப்பழங்களை லண்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கும், அசாமின் எலுமிச்சம்பழத்தை லண்டனுக்கும், அசாமின் சிவப்பு அரிசியை அமெரிக்காவிற்கும், லெடேகு திராட்சைப் பழங்களை துபாய்க்கும் 2021-ஆம் ஆண்டில் அபெடா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்