ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தை கடுமையாக பாதித்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த தட்டுப்பாட்டை போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தொடர்ந்து அனுமதி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்