அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தொழிலதிபர் பெரியசாமி பழனி கவுண்டருக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு கொடுக்க வேண்டிய 18 கோடி ரூபாயை செலுத்த கால அவகாசம் வழங்கியும் செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல் நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையக்கப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.
இதனை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி பழனி கவுண்டர் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில்,1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் 423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடன் வழங்கியவர்களுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும், 450 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் பெரியசாமி கோரியுள்ளார். இந்நிலையில், லீ மெரிடியன் ஹோட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்