கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட வழக்குகளில் 10 எம்எல்ஏ-க்கள் உட்பட 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சொந்த இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள், தொடர்பில் உள்ளவர்களின் வீடுகள் உட்பட 42 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆதரவாளர்கள் என பலரும் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடுப்புகளை அகற்றி தர்ணா மற்றும் சாலைமறியலிலும் சிலர் ஈடுபட்டனர். இதனடிப்படையில் அதிமுகவினர் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரவ காரணமாதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன், உள்ளிட்ட 10 எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் உட்பட 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரிகார்டுகளை தூக்கி ஏறிந்து ரகளை செய்தது. அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட 2 பிரிவுகளில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்டது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவில் அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியது என 2 பிரிவுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்