ராஜஸ்தானில் பெய்துவரும் பருவ மழை காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர், 55 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தானில் மழை காரணமான பெரும்பாலான இறப்புகள், புண்டி பகுதியில் (16) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 15 பேரும், டோங்கில் எட்டு பேரும், கோட்டாவில் ஆறு பேரும், சவாய் மாதோபூரில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் கடந்த மாதம் அமீர் கோட்டை அருகே உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 125 விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன என்று ராஜஸ்தான் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பருவமழை பாதிப்பால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ 5 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சம் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார்.
ராஜஸ்தானில் முக்கியமாக ஹடோடி பிராந்தியம் கனமழையால் தத்தளித்து வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 வரை, ராஜஸ்தானில் 291.49 மிமீ மழை பெய்யும், ஆனால் இந்த ஆண்டு இதுவரை 327.21 மிமீ மழை பெய்துள்ளது, இது 12.3 சதவீதம் அதிகம் ஆகும். பரான், புண்டி, கோட்டா மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களில் இதுவரை 60 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்