அமெரிக்காவில் அதி தீவிரமாக மீண்டும் கொரோனா பரவி வருவதால், அங்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 78 சதவிகித படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால் அங்குள்ள மருத்துவத்துறையினருக்கு மீண்டும் சவாலான சூழல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த ஜூன் மாதத்தில் 11,000 என்ற நிலையில் பதிவாகி வந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, தற்போது ஆகஸ்ட் இறுதியில் 1.50 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கும் சூழலும் அங்கு நிலவுகிறது. இதனால், மருத்துவமனைகளில் 78% படுக்கைகள் நிரம்பியுள்ளன.
தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அலையில், பல லட்ச குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அமெரிக்க அரசு சூழலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது.
மக்களிடையே, "தடுப்பூசி போடாவிடில் சூழல் மேலும் மோசமாகும்" எனக்கூறி தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்த ‘இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள், இனி பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை’ என்ற தளர்வின் விளைவுதான், இப்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைய காரணமாக அமைந்துள்ளதாக அங்கு விமர்சனங்களும் எழுந்துவருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த மூத்த சுகாதாரத்துறை அதிகாரியான டோனா க்ராஸ் என்பவர் சி.என்.என். தளத்துக்கு அளித்த பேட்டியில், “பொதுவாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் டேங்க் அனைத்தும் 90% நிறைந்திருக்கும். அது 30 - 40% என்றாகும்போது, மீண்டும் அதில் ஆக்சிஜன் நிரப்பப்படும். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. தற்போதைய சூழலில், 10-20%க்கும் குறைவான டேங்க் கொண்டுதான் மருத்துவமனைகள் யாவும் செயல்பட்டு வருகிறது. இது ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டுமே பயன்படும். அதற்குப்பின் நிச்சயம் மீண்டும் நிறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் சிக்கல்தான். ஒருவேளை அவை நிரப்பப்பட்டாலும், நோயாளில் 50% பேருக்குத்தான் அதைவைத்து பயன் தரமுடியுமென்ற நிலை உள்ளது. இது அமெரிக்காவுக்கு மிகவும் இக்கட்டான சூழல்” எனக்கூறியுள்ளார்.
ஜூன் 2021-ல் மாதத்தில் சராசரியாக 11 ஆயிரமாக என்றிருந்த கொரோனா பாதிப்பு, அடுத்த 2 மாதங்களில் (தற்போது) ஒன்றரை லட்சமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போதைக்கு 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏதும் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், அவ்வயதுக்குட்பட்டோரை நோய்த் தாக்கத்திலிருந்து காக்கமுடியாமல் திணறுகிறது, அந்நாட்டு சுகாதாரத்துறை.
இதற்கிடையில் அமெரிக்காவில் மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் வீசிய ஐடா புயலால், கொரோனா அதிகமிருக்கும் லூசியானா மாகாணம் உருக்குலைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனை நோக்கி வருவதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அங்கு பலர் தவிக்கின்றனர். மட்டுமன்றி புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கோபுரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்திருக்கிறது. நியூ ஆர்லியன்ஸ் என்ற பகுதியில் மின்சார விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிற இடங்களிலும் மின்சார விநியோகம் கேள்விக்குறியாகும் நிலை இருப்பதால், மருத்துவர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள மருத்துவரொருவர், “இங்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த நோயாளிகளை, இப்படியான நிலையில் எங்களால் வேறு எந்த இடத்துக்கும் அழைத்துச்செல்ல முடியாது. அமெரிக்கா முழுவதுமே மின்சார பாதிப்பு - மருத்துவமனை படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பதால், மாநிலத்துக்கு வெளியேவும் எங்கும் இவர்களை இடமாற்றம் செய்யமுடியாத நிலையிலுள்ளோம். விவரிக்கவியலா கடுமையான காலகட்டத்திலுள்ளோம்” எனக்கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த மருத்துவரொருவர் சி.என்.என்.-ல் பேசுகையில், “குழந்தைகள் மத்தியிலான கொரோனா தாக்கம் அதிகரித்தல் மற்றும் மருத்துவமனை அட்மிஷன் என்பது அதிகமாக உள்ளது. அது இனிவரும் காலத்தில் இன்னும்கூட அதிகரிக்கலாம் என கணிக்கிறோம். குழந்தைகள் இறப்பும் அப்போது சர்வ சாதாரணமாக நிகழக்கூடும்” எனக்கூறி அச்சத்தை கிளப்பியுள்ளார். இவரைப்போன்ற களத்திலுள்ள மருத்துவர்களின் வார்த்தைகள், அமெரிக்கா சுகாதாரத்துறையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி: ஒரு வாரத்தில் 94,000 குழந்தைகளுக்கு பாதிப்பு: அமெரிக்காவில் மோசமடையும் அடுத்த அலை கொரோனா
அமெரிக்காவில் அதிகம் நோய் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃப்ளோரிடாவில் உள்ள, மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குமட்டுமன்றி தென் க்ளோரினா, டெக்ஸாஸ், லூய்சியானா ஆகிய இடங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். இதே போல, டெக்ஸாஸ், ALABAMA, GEORGIA உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளிலும் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பின. தடுப்பூசி போடாதவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா சிகிச்சையளித்துவரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் பல இடங்களில் தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிவதற்கு எதிராக போராட்டம் தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அமெரிக்காவில் தற்போதுவரை நாடு முழுவதும் 61 விழுக்காட்டினர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனால், ‘தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும்’ என அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தம் மக்களுக்கு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 14 மாநிலங்களில், டெல்டா வகை கொரோனாவால் கடந்த ஒரு வாரத்தில் 50% இறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக ஜான் ஹாபிகின்ஸின் ஆய்வொன்றில் சொல்லப்படுகிறது. பாதிப்பும் இறப்பும் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் மத்தியிலான தடுப்பூசி தயக்கம் சற்று விலகி வருவது மட்டுமே இப்போதைக்கு அங்கு ஆறுதலான விஷயம். தினந்தோறும் 9 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்து வருவதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் 80% அதிகமிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் அமெரிக்க அரசு 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அங்கீகரித்துள்ளதால், வரும்நாட்களில் பெரியவர்கள் மட்டுமன்றி, சிறியவர்களையும் தடுப்பூசியை நோக்கி உள்ளிழுப்பதில் அரசுதரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. அதன்மூலம், அந்த வயதையொட்டியவர்கள் ஓரளவு காக்கப்பட முடியும் என்று நம்புகிறது அரசு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்