"மின்சாரம் இருக்காது, சாப்பிடும்போதும் தூங்கும்போதும் கொசுக்கடி, மழை பெய்தால் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிடும், தினமும் இரண்டு வேளை உணவு என்பதே கனவுதான்... அப்போதெல்லாம் நான் இந்த வாழ்க்கையில் இருந்தே ஓடிவிட நினைத்தேன்" என்று தான் கடந்து வந்த பாதையை மனம்திறந்து பேசியவர் யார் தெரியுமா? - இன்று நாடே கொண்டாடும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்தான்.
சிறுவயதில் இருந்து பல சோதனைகளை கடந்து வந்தவர் ராணி ராம்பால். இப்போது அவர் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதிப்பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
டோக்கியொ ஒலிம்பிக்கின் தொடக்க போட்டிகளில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி தோல்விகளைக் கண்டாலும், அடுத்தடுத்து புலிப் பாய்ச்சலை காட்டி வருகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்திய அணி லீக் போட்டிக்கு மேல் தாங்காது என்று கூறிவந்த நிலையில் தொடர் வெற்றிகள், காலிறுதிக்கு தகுதி, இப்போது அரையிறுதிக்கு தகுதி என "சிங்கப் பெண்களாக" வலம் வருகிறார்கள் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்.
இந்த வெற்றிளுக்கு பயிற்சியாளர் மரினேவும், கேப்டன் ராணி ராம்பாலும் மிக முக்கிய பங்குவகிக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அதிலும் ராணி ராம்பால் கடந்து வந்தப் பாதை அத்தனை எளிதானதல்ல.
ராணி ராம்பால் கதை: ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள ஷாபாத் என்ற ஒரு சிறிய கிராமம்தான் ராணியின் சொந்த ஊர். அந்தக் கிராமத்தில் வண்டி இழுத்து பிழைத்துக் கொண்டிருந்தவர் ராம்பால். அவரின் மனைவி வீட்டு வேலை செய்துவந்தார். ராம்பாலுக்கு இரண்டு மகன்கள், மருமகள்கள் என்று சிறிய வீட்டில் வசித்து வந்தார். ராம்பாலின் கடைசி மகள்தான் ராணி. கூட்டுக் குடும்பமாக இருந்த ராம்பாலின் குடும்பம் பெரும் பொருளாதார சிக்கல்களுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ராணிக்கு 7 வயது இருக்கும்போது ஹாக்கி மீது பெரும் ஈர்ப்பு வருகிறது. குடும்பத்தினர் எதிரப்பையும் மீறி ஹாக்கி பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
அப்போது ராம்பாலுக்கு தினசரி ரூ.80 தான் வருமானம். ஹாக்கி பயிற்சிக்கு ராணி காலை 5 மணிக்கு எழுந்து புறப்பட வேண்டும். ஆனால், ராணியின் வீட்டில் அலாரம் அடிக்கும் கடிகாரம் கிடையாது என்பதால் அவரின் தாயார் கண் விழித்து ராணியை ஹாக்கி பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஹாக்கி விளையாட்டில் பங்கேற்கும் பெண்கள் தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும் என்று அகாடெமி வலியுறுத்தியுள்ளது. ஆனால் ராணிக்கு குடும்பச் சூழல் காரணமாக 200 மில்லி பாலே குடிக்க முடிந்தது. ஹாக்கி விளையாட வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் பாலில் நிறைய தண்ணீர் ஊற்றி குடித்தாக ராணி பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் புதிய ஹாக்கி பேட் கூட கிடைக்கவில்லை. உடைந்த ஹாக்கி பேட்டை வைத்துதான் பயிற்சியை தொடங்கியுள்ளார் அவர்.
ராணியின் முதல் பயிற்சியாளர் சர்தால் பல்தேவ். முதலில் ராணியை போதிய ஊட்டச்சத்து இல்லை என தன்னுடைய மாணவியாக சேர்க்க மறுத்த பல்தேவ், அவரது சுறுசுறுப்பைக் கண்டு வியந்து சேர்த்துக் கொண்டார். அவர் முதல் கோல் அடித்தபோது, பத்து ரூபாய் நோட்டில் பல்தேவ் கையொப்பம் இட்டு பரிசளித்திருக்கிறார். ஆனால், அதையும்கூட வறுமை காரணமாக ராணி பயன்படுத்த நேரிட்டது. அதுதான் அவர்களின் குடும்ப நிலை. ஆனால், இப்போதும் பல்தேவை மறக்காத ராணி "அவர் எனக்கு கடவுளைப் போன்றவர்" என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அகாடெமி சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றதற்காக ராணிக்கு ஊதியமாக ரூ.500 கொடுக்கப்பட்டது. அப்போதுதான் ராணியின் குடும்பம் முதல்முதலாக அவ்வளவு பணத்தை பார்த்துள்ளது.
தொடர்ந்து கடின உழைப்பை கொட்டிக்கொண்டிருந்த ராணிக்கு 2010-இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. அந்தத் தொடரில் 7 கோல்களை அடித்து சிறந்த இளம் வீராங்கனைப் பட்டத்தை வென்றார். 2018-இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், 2016-இல் அர்ஜுனா விருது, FIH ஹிரோஷிமா போட்டியில் சிறந்த வீரருக்கான விருது என்று பலவற்றை வென்றுள்ளார்.
2016-ஆம் ஆண்டு, 36 வருடங்கள் கழித்து, ஒலிம்பிக்கிற்குச் சென்றது இந்திய பெண்கள் அணி. அப்போது ஹரியானா மாநிலம் அளித்த பரிசுத் தொகையை வைத்து தன் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்ததே தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவதாக ராணி ராம்பால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பின்பு 2019 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ராணி ராம்பால் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனானார். அந்த ஆண்டே டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிப்பெறும் போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணியினர், இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை வந்துள்ளது. ராணி ராம்பால் தலைமை இதற்கு முக்கியக் காரணம். சோதனைகள் எந்தவொரு வீரர்களையும் சோர்வடைய வைப்பதில்லை என்பது ராணி ராம்பாலின் வாழ்க்கையே வளரும் வீரர்களுக்கான உதாரணம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்