ரசிகர்களை தங்கள் ஆட்டத்தின் மூலம் கவரும் வித்தையை கற்றவர்கள் விளையாட்டு வீரர்கள். இது அனைத்து விளையாட்டுக்கும், அதை சார்ந்த வீரர்களுக்கும் பொருந்தும். கிரிக்கெட் என்றால் தோனியும், பேட்மிண்டன் என்றால் பி.வி.சிந்துவும், பாக்சிங் என்றால் மேரி கோமும் இந்தியர்களின் நினைவலையில் வந்து செல்வர். இந்த நினைவலைகள் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த ரசிகர்களுக்கும் தங்கள் நாட்டுக்காக சர்வதேச அளவில் அசத்தும் சாம்பியன்கள் வந்து செல்வது வழக்கம்.
அப்படிப்பட்ட சாம்பியன் வீரர்கள் தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். தற்போது இருவரும் தங்களது மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் தாங்கள் சார்ந்த விளையாட்டுகளில் இருந்து விலகி உள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ் கால வரையின்றி விலகி நிற்க உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமோன் பைல்ஸ்
அமெரிக்க நாட்டின் ஒலிம்பிக் பதக்க நம்பிக்கைகளில் ஒருவர் 24 வயதான சிமோன் பைல்ஸ். அதற்கு காரணம் அவரது முதலாவது ஒலிம்பிக்கான ரியோவில் மட்டும் 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை அவர் வென்றிருந்தார். டோக்கியோவிலும் அது நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கைகூடாமல் போனது.
அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார் “நான் எனக்கு சரியென படுவதை செய்ய வேண்டும். என் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கிறேன்.
ஒலிம்பிக் என்பது மிகப்பெரிய களம். இருந்தாலும் எனது மனமும், உடலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்காத (Sync) காரணத்தினால் விலகுகிறேன்” என தெரிவித்திருந்தார்.
பென் ஸ்டோக்ஸ்
கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு முதல் 50 ஓவர் உலக கோப்பை வெல்ல வேண்டுமென்ற பெருங்கனவை மெய்ப்பித்தவர் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். ஆல் ரவுண்டரான இவர் அண்மைய காலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பெரிய தாக்கத்தை தனது ஆட்டத்தின் மூலம் ஏற்படுத்தி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 2019 உலக கோப்பை இறுதி போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் அவரது சிறந்த இன்னிங்ஸில் ஒன்று. இந்நிலையில் தான் திடீரென மனநலத்தை காரணம் காட்டி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து காலவரையின்றி ஒதுங்கி இருக்கப்போவதாக அவரது சார்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர், ஜப்பான் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா மாதிரியானவர்களும் மன நலன் சார்ந்த ஆரோக்கியத்தை காரணம் காட்டி அவர்கள் சார்ந்த விளையாட்டிலிருந்து சில காலம் விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்களுக்கு மனநலம் எந்தளவுக்கு முக்கியம்? உளவியல் மருத்துவரின் கருத்து என்ன?
“ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி என்ற ஒரு துறையே தனியாக விளையாட்டில் உள்ளது. இதன் மூலம் விளையாட்டில் உளவியல் சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்கின்ற சிக்கலில் தொடங்கி அதே வீரர்கள் திறம்பட தங்களது விளையாட்டில் ஜொலிக்க செய்வது தான் ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்டின் பணி.
குறிப்பாக விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்கின்ற உளவியல் சிக்கல்களில் முதலாவது இடத்தில் இருப்பது பர்ஃபாமென்ஸ் Anxiety. அதாவது தேவையற்ற பதட்டதினால் ஒரு விளையாட்டு வீரரின் செயல்பாடே மங்கிவிடும் அளவுக்கு அந்த பதட்டம் பயணிக்கலாம்.
நம்மால் முடியுமா? செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும்? நாட்டையோ அல்லது அணியையோ நமது ஆட்டம் ஏமாற்றி விடுவோமோ? தனது ஆட்டம் குறித்த விமர்சனங்கள்? கவனச்சிதறல்? என்பது மாதிரியானதாக இந்த பதட்டம் அவர்களுக்கு ஏற்படலாம். அதே போல அதிகப்படியான அழுத்தமும் வீரர்களுக்கு உளவியல் சார்ந்த சிக்கல்களை கொடுக்கலாம். இப்படி நபருக்கு நபர் உளவியல் சிக்கல்கள் மாறுபடும். நட்சத்திர வீரர் என்றால் இந்த பதட்டம் சற்று கூடுதலாக இருக்கும்.
தனிநபர் விளையாட்டை காட்டிலும் ஒரு குழுவாக விளையாடும் போது இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் வீரர்கள் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டுகளில் இருந்து விலக நேரிடலாம். சமயங்களில் இது உளவியல் ஆலோசகரின் பரிந்துரைப்படியோ அல்லது வீரர்களின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையிலோ கூட எடுக்கப்படாலம்.
விளையாட்டில் இது மாதிரியான அழுத்தம், பதட்டங்களை எதிர்கொள்கின்ற வீரர்களுக்கு உதவி உளவியல் ரீதியாக அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட்கள் தான். அவர்களின் உதவியுடன் வீரர்கள் தங்களது மன ஆரோக்கியத்தை கூட்டி புதுப்பாய்ச்சலுடன் மீண்டும் களத்திற்குள் என்ட்ரி கொடுப்பர்” என்கிறார் உளவியல் மருத்துவர் சுனில் குமார் விஜயன்.
மருத்துவர் சொன்னதை போல சர்வதேச அளவில் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடி வரும் விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் தாய்நாட்டு அணிக்காகவும், கிளப் மற்றும் லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதும் மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கலாம். அதே போல கொரோனா பேரிடரால் குடும்பத்தை பிரிந்து பயோ பபூளில் வீரர்கள் இருக்க வேண்டிய கட்டாயமும் அவர்களை சோர்வடைய செய்யலாம். இதனால் வீரர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் விளையாட்டுகளில் இருந்து மன நலனுக்காக விலக வேண்டி இருக்கிறது. புகழின் உச்சியில் இருக்கும் போது உலகம் என்ன சொல்லுமோ என்பதையெல்லாம் யோசிக்காமல் வீரர்கள் தங்கள் மன நலனை காக்க தயங்காமல் விளையாட்டில் இருந்து விலகி நிற்கும் முடிவை வரவேற்க வேண்டும். அதற்கு மாறாக அதனை விமர்சிப்பது அவர்கள் மேலும் உளைச்சலுக்கு ஆளாக்கும்.
உடலும், உள்ளமும் நலமாக இருப்பது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் நல்லதல்லவா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்