இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் யானைகள் - மனிதன் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த மோதலால் இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏராளம். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தோராயமாக 500 பேர் யானைகள் தாக்குதலால் உயிரிழக்கின்றனர். அதேபோல ஆண்டுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்த்து 100 யானைகளும் பலியாகின்றன.
யானைகள் - மனிதன் மோதலுக்கு பெரும்பாலும் காடுகள் ஆக்கிரமிப்பே பெரும் குற்றச்சாட்டாக முன் வைக்கப்படுகிறது. இதனை தடுக்கு யானைகள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
ஏன் நம் தமிழ்நாட்டில் கூட வால்பாறை பகுதியில் யானை - மனிதன் மோதலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு இரு தரப்பு உயிரிழப்பும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அதேபோல சத்தியமங்கலம் வனப்பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாபோல சத்தீஸ்கர் மாநிலத்திலும் யானைகள் - மனிதன் மோதல் மிகவும் அதிகம். அதிலும் அம்மாநிலத்தில் 80 சதவீத மக்கள் விவசாயம் பார்க்கின்றனர். அதில் 35 சதவீதத்தினர் பழங்குடியினர். பெரும்பாலும் அவர்களின் விலை நிலங்கள் அனைத்தும் காட்டையொட்டிய பகுதிகளில் இருப்பதால் இங்கு பிரச்னைகளும் அதிகம்.
வனத்துறையின் புதிய ஐடியா
யானை - மனிதன் மோதலை எப்படியாவது கட்டுப்படுத்த நினைத்த அம்மாநில வனத்துறைக்கு ஒரு யோசனை பிறந்தது. பெரும்பாலும் யானைகள் உணவைத் தேடி வனத்தில் இருந்து ஊருக்குள் வருவதால்தான் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த காட்டையொட்டிய பகுதிகளில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் மணிகள் யானைக்கு மிகவும் பிடித்த உணவு என்பதால் தேவையான உணவை சாப்பிட்ட பின்பு அவை மீண்டும் வனத்துக்குள்ளேயே திரும்பிவிடும் என்பதுதான் அந்த புது யோசனை. இதனை அம்மாநிலத்தின் சூரஜ்பூர், தரம்ஜெய்கர், பாலோட் ஆகிய இடங்களில் செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர்.
நெல் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் அரசு சார்பில் நெல்களை திறந்த வெளியில் கொட்டியும் உள்ளனர். அப்படி கொட்டி வைத்ததற்கு நல்ல பலனாக கடந்த சில நாள்களில் 14 குவிண்டால் நெல்களை யானைகள் சாப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் யானைகள் தொடர்ந்து ஒரே உணவை எத்தனை நாள் சாப்பிடும்? வேறு இடத்துக்கு இடம் பெயருமா என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாகவும் தெரியாது.
ஆனால் இப்போதைக்கு இந்தத் திட்டம் நல்ல பலன் கிடைத்துள்ளதாக அம்மாநில வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மிக முக்கியமாக நெல் உற்பத்தியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னணியில் இருப்பதாலும், அங்கு தேவைக்கு அதிகமான நெல் இருப்பதாலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சர்குஜா, ராய்கர், கோர்பா, சூரஜ்பூர், மஹாசமுந்த், தம்தாரி, காரியாபாத், பலோட், பல்ராம்பூர், காக்கர் மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 204 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 45 யானைகளும் உயிரிழந்துள்ளதாக அண்மையில் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே 3 ஆண்டுகளில் யானைகளால் விளை நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக 66,582 வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்ததாக 3151 வழக்குகளும் பதிவாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்