சென்னை குன்றத்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாதது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் மக்கள் நடமாடும்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. இதைப் பின்பற்றாதோர் மீது காவல் துறையினர் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழா நடைபெற்றது, இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டார். இவ்விழாவில், படம் எடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களைத் தவிர ஏனைய நேரங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படாமல் ஒருவரையொருவர் இடித்துக்கொள்ளும் வகையில் கடும் நெருக்கடியோடு பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர், இங்கும் தனிமனித இடைவெளி கொஞ்சமும் பின்பற்றப்படவில்லை. இது அங்கிருந்தோரை அதிருப்தி அடையச் செய்தது ஏற்கனவே தமிழகத்தில் நாள்தோறும் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளே நோய் பரவலுக்கு காரணமாவது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்