கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்த புகாரில் பெண் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வயது குழந்தையை, பெற்ற தாயே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. காண்போரை பதற வைத்த அந்தக் காட்சிகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசிதான், தனது குழந்தையை சித்திரவதை செய்தார் என உறுதி செய்யப்பட்டது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட துளசிக்கும் - வடிவழகனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவியை ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார். பிரச்னை ஏற்படும்போதெல்லாம் துளசி தனது 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தி, அதனை தனது அலைபேசியில் வீடியோவாக யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து வைத்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் துளசி தனது குழந்தையை சித்திரவதை செய்யும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியானதைப் பார்த்து வடிவழகன் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி சத்தியமங்கலம் காவல்துறையினர், சித்தூர் சென்று துளசியை கைது செய்து கொண்டு வந்தனர். அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் எனச் சந்தேகம் எழுந்ததால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மனநலப் பரிசோதனை நடத்தப்பட்டது.
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் துளசிக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரியவந்ததை அடுத்து, அந்தப்பெண் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, மிஸ்டு கால் மூலம் அறிமுகமாகி துளசியுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வந்த பிரேம்குமார் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குழந்தையை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணங்கள் கண்டறிந்து களையப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அந்த பெண் செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில், 17 வயதில் 32 நிரம்பிய ஆண்மகனுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததற்கான காரணத்தையும், அந்த பெண்ணின் அப்போதைய உளநிலையும் இந்த கொடூர எண்ணம் உருவாக அடிப்படையாய் இருந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாத நிலை உள்ளது. கணவனும், மனைவியும் கருத்து வேறுபாடால் பிரிந்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே, அவர்கள் இருவருக்குமிடையே சண்டைக்கு பஞ்சமிருக்காது என்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. 22 வயதில் 2 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணின் மனவளமும், உடல்வளமும் எப்படி இருந்திருக்கும்? அதன் பின் இருக்கும் மன அழுத்தம், நிம்மதியின்மை போன்ற காரணிகளையும் ஆராயும் போதுதான், இது போன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்
குடும்ப வன்முறைக்கு பெண்கள் பலியாக்கப்படும் சமுதாயத்தில், பெற்றக் குழந்தையையே கொடூரமாக தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்யும் அளவிற்கு அந்த பெண் குரூரமாக மாற காரணம் என்ன? என்பதை ஆராய வேண்டியதும் அவசியமாகிறது. குழந்தை திருமணங்கள் முற்றிலுமாக தடுக்கப்படாத இந்திய சமூகத்தில் இந்த சம்பவம் நமக்கொரு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.
இது மட்டுமன்றி, பார்க்கும் போதே மனதை பதறவைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பும் மனநிலையையும் சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டிய தருணமிது. இந்த வீடியோவை காணும் ஒரு குழந்தை, பாதுகாப்பற்றதாக உணருவதோடு, தாய்மை குறித்த எதிர்மறை கண்ணோட்டத்தை பெறும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இது போன்ற காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளின் ஆழ்மனதில் வன்முறை வேர்பிடிக்கவும் கூடும். எனவே இது போன்ற கொடூரங்களைக் கண்டித்து தண்டிக்கும் அதே வேளையில், அதற்கான காரணங்களையும் களைய முற்படுவதே எதிர்கால சமுதாயத்தை அன்பில் தளைத்திடத் செய்யும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சதீதா பேசுகையில், '' அந்த பெண் செய்தது மனிதாபிமானமற்ற செயல். கணவன் மீது இருக்கும் கோபத்தை குழந்தை மீது அந்த பெண் காட்டியிருக்கிறார். சட்டப்படி 17வயதில் திருமணம் செய்வதே தவறு. திருமணத்துக்கான மனநிலையே அப்போது இருக்காது. அதேபோல அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் 15 வருடம் வயது வித்தியாசம் இருக்கிறது. அது மிகப்பெரிய இடைவெளி. இதனால், இருவருக்குள்ளான புரிதல் சிக்கலை ஏற்படும். தற்போதைய சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்னை இது. இதனை களைய வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நடந்த குழந்தைகள் மீதான தாக்குதல்கள் :
2015ம் ஆண்டு திண்டுக்கலில் மதுபோதையிலிருக்கும் தந்தை ஒருவர் தன்னுடைய 10 மாத குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.
2016ம் ஆண்டு ஒடிசாவில் பாட்டியால் குழந்தை சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறது. பிறந்து 8 நாளான அந்த குழந்தையை சூடு வைத்து துன்புறுத்தியுள்ளனர். கேட்டால் மஞ்சள் காமாலையிலிருந்து குணமாக்க இப்படி செய்கிறோம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
2017ம் ஆண்டு சென்னையில் கொருக்குப்பேட்டையில் பெண் குழந்தையை பிடிக்காத காரணத்தால் தந்தையே கொடூரமாக தாக்குகிறார். குழந்தை உயிரிழந்துவிட்டது.
2018ம் ஆண்டு மதுரையில் தந்தை குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.
2020ம் ஆண்டு பெங்களூரில் தாயாலும், பாட்டியாலும் குழந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளது. அனைத்து சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலான பின்பு தான் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சட்டம் சொல்வது என்ன?
குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம். குறிப்பாக, குழந்தைய யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களால் குழந்தைக்கு நேரிடும் துன்புறுத்தலை கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அது காப்பகத்தில் இருக்கும் குழந்தையாக கூட இருக்கலாம்.
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை தண்டிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறையும், 1லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்