Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோடிகளில் கடன் வாங்கும் மாநில அரசுகள் - எங்கே? எப்படி?.. கடனை எப்படி கணக்கிடுகிறார்கள்?

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன் தினம் அதிமுக அரசு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், “2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது. 2016-21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

மின்வாரியத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பலமடங்கு சரிந்துவிட்டது. தமிழக அரசுக்கான வருமானம் 4ல் ஒருபங்கு குறைந்துவிட்டது. முந்தைய திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது. முந்தைய திமுக ஆட்சியில் 1.02% ஆக இருந்த வரி அல்லாத வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 0.17 ஆக குறைந்தது. உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் தமிழக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாயாக மத்திய அரசு ரூ.20,033 கோடியை தரவேண்டியுள்ளது.

image

திமுக ஆட்சிக்காலத்தில் உற்பத்தியில் வருமானம் 13.89% ஆக இருந்தது; தற்போதைய வருமானம் உற்பத்தியில் 4.65% சரிந்துள்ளது. மானியங்களுக்கு அதிமாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான சரியான பயனாளிகள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் இல்லை. தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை; வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கே பலன். மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி கட்டணம் செலுத்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் என ரூ.1,743 கோடி பாக்கி வைத்ததுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மறைமுக கடன் 39,079 கோடி. தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை 92,000 கோடி. தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. கடன் வாங்கி செய்யப்படும் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்ப்பங்கு 0.45% ஆக மட்டுமே உள்ளது. மின்சாரத்துறையில் மட்டும் அரசுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை உயர்வு, மேலாண்மை செலவு ஆகியவற்றால், ஒரு 1 கிலோ மீட்டருக்கு அரசு பேருந்து ஓடினால் அரசுக்கு ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாமக்கல்லில் ஒருவர் தன் குடும்பத்தின் பேரில் இருக்கும் கடனான ரூ. 2,63,976 க்கு காசோலையை தயார் செய்து அதை வருவாய் ஆட்சியர் அலுவலகத்திற்கு செலுத்த சென்றார். ஆனால் அங்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அவர் மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில், அரசு எங்கிருந்தெல்லாம் கடன் வாங்கலாம், எவ்வாறு செலவு, முதலீடு செய்யலாம் என்பது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் பேசினோம்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் பேசியதாவது:

எதற்காக கடன் வாங்குகிறார்கள்:

தேவையின் அடிப்படையில் மாநில அரசு மத்திய அரசிடம் நீண்டகால கடனோ அல்லது குறுகிய கால கடனோ வாங்க முடியும். இந்த கடன் நீண்டகாலத்தில் பயனளிக்கக்கூடிய திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பாலம் கட்டுதல், சாலை அமைத்தல், மின்சார உற்பத்திக்கான திட்டங்களுக்காக கடன் வாங்கி அதற்கான வட்டியை கொடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில், அதில் பிரச்னை இல்லை. பலமுறை என்ன செய்கிறார்கள் என்றால், கடனை வாங்கி அன்றாட நடைமுறை மூலதனமான சம்பளம் கொடுத்தல், பென்சன் கொடுத்தல் என இதற்கெல்லாம் பயன்படுத்தும்போது கடன்சுமை அதிகமாகிறது. அதற்கான வட்டியையும் வருடாவருடம் கட்டவேண்டியுள்ளது.

image

யாரிடமெல்லாம் கடன் வாங்குகிறார்கள்:

கடன் எங்கெல்லாம் வாங்குவார்கள் என்று பார்த்தால், மத்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கி, மாநில அரசுகளுக்கு என்று சில சிறப்பு திட்டங்கள் உள்ளன. இங்கெல்லாம் மாநில அரசு வாங்க முடியும். இது தவிர, கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்தும் கடன் வாங்க முடியும். அதேபோல் மாநில அரசின் கார்ப்ரேஷன்களிடமும் பத்திரங்கள் மூலம் கடன் பெற முடியும்.

கடனுக்கான வட்டி விகிதத்தை பொறுத்தவரை, பொதுவாக 4லிருந்து 6 சதவீதத்திற்குள் இருக்கும். ஆனால் மாநிலங்களை பொறுத்தும், அவர்கள் ஏற்கெனவே கட்டிய வட்டியின் கால அளவை வைத்தும் வட்டிவிகிதங்கள் மாறுபடலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரேட்டிங் இருக்கும். அதை பொறுத்து மாறும்.

எப்படி ஒவ்வொரு மீதான கடனை எப்படி கணக்கிடுகிறார்கள்?

தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 கடன் இருப்பதாக கணக்கிட்டு சொல்லியுள்ளார்கள். இதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்டவர்களை தவிர்த்து, மீதமிருக்கும் மக்கள் தொகையை மொத்தமிருக்கும் கடனிலிருந்து வகுத்து ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடன் இருக்கிறது என தீர்மானிப்பார்கள்.

image

கடனை எப்படி செலவு செய்வார்கள்?

அரசு வாங்கும் கடனை எந்தவகையில் செலவு செய்ய வேண்டுமென்றால், கடனை நீண்ட கால முதலீடுக்காக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுக்கு கடன் சுமை இருக்காது. முதலீடு செய்யாமல் வட்டியை மட்டும் கட்டி வந்தால் அதில் எந்த பயனும் இல்லை. இது தேவையில்லாத கடன் சுமையைத்தான் ஏற்படுத்தும். மாநில அரசுக்கு வரிவருவாய் என்று பார்த்தீர்களானால், சொத்து வரி, மின்சார உற்பத்திக்கான வரி, மோட்டார் வாகன வரி, பதிவுத்துறை மூலம் வரும் வரி, மதுபானத்தின் மூலம் வரும் தீர்வை என இவையெல்லாம் வருவாயாக இருக்கிறது. இதுபோக ஜிஎஸ்டியில் ஒரு குறிப்பிட்ட அளவு மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுப்பார்கள். முதலீடு இல்லாமல் கடன் சுமையை ஏற்றிக்கொண்டால்தான் வரியை உயர்த்தும் முயற்சியில் கையை வைப்பார்கள். தற்போது தமிழகத்தின் நிலைமையும் இவ்வாறே உள்ளது.

கடனை கட்டாயம் நாமெல்லாம் கட்ட வேண்டுமா?

அரசு வாங்கியிருக்கும் கடனை யாரும் தனிநபராக கட்ட வேண்டியதில்லை. ஒருவர் மீது இவ்வளவு கடன் இருக்கிறது என்று சொன்னது புரிதலுக்காக சொல்லப்பட்டதேதவிர யாரும் அதை கட்ட வேண்டும் என்பது தேவையில்லை. அதை அரசே கட்டிவிடும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்