தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். வெளி மாநிலங்களில் தமிழ் பயில்வோருக்கு உதவித் தொகை தரப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இவற்றுடன், ‘பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் அதில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை தரப்படும். தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்’ உள்ளிட்டவற்றையும் அமைச்சர் அறிவித்துள்ளார். அந்தவகையில் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் ‘சங்க இலக்கிய வாழ்வியல் ஓவியங்களாகவும் எளிய விளக்கத்துடனும் காஃபி மேசை புத்தகமாக வெளியாகும்; தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்தநாளன்று இலக்கிய கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி தரப்படும். புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்களின் ஒலி/ஒளிப் பொழிவுகள் ஆவணமாக்கப்படும். குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர்சூட்டி ஊக்குவிக்கப்பட வழிமுறைகள் உருவாக்கப்படும். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: தமிழில் பெயரெழுதும்போது முன்எழுத்தையும் தமிழில் எழுதுக: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்