மதுரையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன திருமணமான பெண்ணொருவரை, திருநம்பியாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மதுரை கீழப்பனங்காடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். சரவணனுக்கும், ஜெயஸ்ரீக்கும் 2019 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறினார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அலங்காநல்லூர் காவல் நிலையத்திலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினரும் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒரு வருடமாகியும் மனைவியை கண்டுபிடித்து கொடுக்காததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சரவணன் கடந்த ஆண்டு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜெயஸ்ரீயை மதுரை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடியுள்ளனர். அப்படி தேடியபோது, ஜெயஸ்ரீ சென்னையில் வீடு எடுத்து தங்கயிருந்ததும், உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அங்குசென்று ஜெயஸ்ரீயை கண்டறிந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஜெயஸ்ரீ திரும்நம்பியாக மாறி தனது 12 ம் வகுப்பு பள்ளி தோழியான துர்காதேவி என்ற பெண்ணுடன் இணையர்களாக வாழ்ந்து வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஜெயஸ்ரீயை கண்டுபிடித்ததை தொடர்ந்து, இருவரையும் மதுரை அழைத்து வந்த காவல்துறையினர் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும், கணவர் சரவணனுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: தென்தமிழகத்தில் முதன்முறையாக திருநம்பிக்கான அறுவைசிகிச்சை செய்த மதுரை ராஜாஜி மருத்துவமனை
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு ஜெயஸ்ரீ ஆஜர்படுத்தப்பட்டு விசாரித்த போது, “பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே நானும் துர்காதேவியும் காதலித்தோம். துர்காதேவியுடன் சேர்ந்து வாழ விரும்பி, நான் திருநம்பியாக மாறி விட்டேன். சென்னையில் தனியாக வீடு எடுத்து அங்கேயே தங்கி உணவகத்தில் வேலை பார்த்து வருகிறேன். கணவருடனும், குடும்பத்துடனும் செல்ல விருப்பமில்லை” எனக்கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி செயல்பட உரிமை உள்ளது என நீதிமன்றம் கூறியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்