கொரோனா பேரிடர் பலரையும் பல விதமாக பாதிக்கச் செய்துள்ளது. ஆரோக்கியம் மட்டுமல்லாது பலருக்கு வேலை இழப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் எளிய மக்களுக்கு வேலை தேடுவதற்கான பாலமாக அமைந்துள்ளது 'அப்னா' (apna) மொபைல் அப்ளிகேஷன்.
'அப்னா' என்பதற்கு இந்தி மொழியில் 'நமது' என்று பொருள். வேலை தேடும் தொழிலாளிகளையும், வேலை கொடுக்கும் நிறுவனங்களையும் ஒற்றைப் புள்ளியில் இணைப்பதுதான் இதன் முதல் பணி. குறிப்பாக 'ப்ளூ காலர்' என சொல்லப்படும் உழைக்கும் வர்க்கத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட அப்ளிகேஷன் இது. மேலும், பணி ஓய்வுக்குப் பிறகு வேலை செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கும் இந்த அப்ளிகேஷன் வேலை தேட உதவுகிறது.
சுமார் 1 கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்கள், 1.5 லட்சம் வேலை தரும் நிறுவனங்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வேலைக்கான நேர்முகத் தேர்வும் இந்த செயலியின் ஊடாகவே உறுதி செய்துகொள்ளலாம். போலிகளைக் களைவதற்காக உண்மை கண்டறிதல் (Fact Checking) நடைமுறையை இந்த அப்ளிகேஷன் பின்பற்றுகிறது.
இந்த அப்ளிகேஷன் கடந்த 2019 இறுதியில் வடிவமைக்கப்பட்டது. முழு செயல்பாட்டுக்கு வந்து 15 மாதங்களே ஆகியுள்ளது. 11 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். தமிழைப் பொறுத்தவரையில் மெசேஜுக்கு ரிப்ளை கொடுப்பதைப் போல ஆங்கிலம் கலந்த தமிழில் உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலான இயங்கு தளத்தை தங்கள் போனில் கொண்ட பயனர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் 4.4 ஸ்டார்கள் பெற்றுள்ள அப்ளிகேஷன் பயன்படுத்தவும் எளிதாக உள்ளது என இதனை பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னென்ன வேலைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் தேடலாம்?
விற்பனைப் பிரதிநிதி, டிரைவர், சமையல் பணி, ஓட்டல் மேலாண்மை, ஹவுஸ் கீப்பிங், பணிப்பெண், சில்லறை வணிகம் சார்ந்த பணி, தனியார் காவலாளி, டெலிகாலர், கணக்கர், ஏசி டெக்னீஷியன், அலுவலக உதவியாளர், அழகுக் கலை மற்றும் ஒப்பனை சார்ந்த பணி, தச்சர், கெமிக்கல் இன்ஜினியர், டேட்டா என்ட்ரி, கன்டென்ட் ரைட்டிங், டிடிபி (DTP), எலக்ட்ரீஷியன், மின் பொறியாளர், ஃபேஷன் டிசைனர், உடற்பயிற்சி டிரைனர், கிராபிக் டிசைனர், மனிதவள நிபுணர், லேப் டெக்னீஷியன், மெஷின் ஆபரேட்டர், மொபைல் டெக்னீஷியன், நர்ஸ், பெயின்டர், பிளம்பர், வரவேற்பாளர், தையல் கலைஞர், ஆசிரியர், டர்னர், வெல்டர், லேபர், மருத்துவர், செவிலியர், பொறியாளர் என சுமார் 68 விதமான வேலைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் தேடலாம். எதிர்வரும் நாட்களில் இந்தப் பட்டியல் வேலை கொடுப்பவர்களின் தேவைக்கு ஏற்ப நீளும்.
அப்னா அப்ளிகேஷன் சேவை இந்தியா முழுவதும் கிடைக்கிறதா?
இப்போதைக்கு இந்தச் செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள 30 நகரங்களில் வேலை தேடலாம். ஆக்ரா, அகமதாபாத், அவுரங்காபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி - என்சிஆர், கோவா, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, லூதியானா, மும்பை, நாக்பூர், நாசிக், பாட்னா, புனே, ராஜ்கோட், ராஞ்சி, சூரத், விஜயவாடா, விசாகப்பட்டினம் மாதிரியான நகரங்களில் வேலை தேடலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னை, கோவை ஆகிய இரண்டு நகரங்கள் இதில் அடங்கியுள்ளது. அவரவருக்கு விருப்பமுள்ள இடங்களில் (லொக்கேஷன்) வேலை தேடும் ஆப்ஷன் உள்ளது.
சென்னை சுற்றுவட்டாரத்தில் ஆலத்தூர் தொடங்கி விம்கோ நகர் வரையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேலைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் தேடலாம். கோவையைப் பொறுத்தவரையில் செல்வபுரம் வடக்கு தொடங்கி ஆவாரம்பாளையம் வரை வேலை தேடலாம்.
வேலை தேடுபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வேலை தேடலாம்.
இந்த அப்ளிகேஷனில் பயனராக இணைந்து பயன்படுத்துவது எப்படி?
இதில் பயனராக இணைவது மிகவும் எளிது. செல்போன் எண், பெயர், படிப்பு, வேலை தேடும் நகரம், வேலைக்கான லொக்கேஷன், பாலினம், அப்ளிகேஷனின் மொழி, பணி அனுபவம் குறித்த விவரங்கள் (முன் அனுபவம் இல்லை என்றாலும் அந்த விவரத்தை தரலாம்), கல்வித் தகுதி, புகைப்படம் மாதிரியான பயனரின் சுய விவரங்கள் அடங்கிய புரொஃபைல் தயார் செய்ய வேண்டும். இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்தும் அவசியம் கொடுக்க வேண்டும். ஏனெனில், அதன் மூலம் பயனரின் நம்பகத்தன்மையை செயலி அறிந்துக் கொள்ளும்.
அதன் பின்னர் அவரது தகுதிக்கு ஏற்ப உள்ள வேலைகளின் விவரங்கள் அனைத்தும் செயலியின் முகப்புப் பக்கத்தில் டிஸ்பிளே செய்யப்படுகிறது. அதைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள பணிகளை தேர்ந்தெடுத்து, நேர்காணலில் பங்கேற்று வேலை பெறலாம். வேலைக்கான தேவை, வேலை நேரம், வேலை இடம், சம்பளம் என அனைத்து விவரங்களும் இதில் உள்ளன.
உதாரணமாக டெலிவரி சார்ந்த வேலை என்றால் டூவீலர் லைசன்ஸ், டூவீலர், ஆதார் கார்டு, பான் கார்டு மாதிரியானவை வேலைக்கான தேவைகளாக உள்ளன. இப்படி ஒவ்வொரு வேலைக்கும் தேவைகள் மாறுபடும்.
பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வேலைக்கு அப்ளை செய்து, நேர்காணல் மாதிரியான டாஸ்குகளை கடந்து வேலையை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம். பகுதி நேரம், முழு நேரம், வொர்க் ஃப்ரம் ஹோம், நைட் ஷிஃப்ட், மகளிருக்கான வேலைகள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதில் வேலை தேடலாம்.
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை கொடுக்க விரும்புபவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு > https://play.google.com/store/apps/details?id=com.apnatime
வாழ்த்துகள்!
முந்தைய அத்தியாயம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்