மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இவ்வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவ்விசாரணை தங்கள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. கொலைகள் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் கூட மாநில அரசு வழக்குப்பதியவில்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் சாடியிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேற்கு வங்காள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சிபிஐ நடத்தும் விசாரணை நியாயமான முறையில் நடக்காது என தாங்கள் நம்புவதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்