தனது சமூகத்தின் பிரதிநிநித்துவத்துக்காகவும், பொது பிரச்சனைக்காகவும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டுள்ள வேலூரை சேர்ந்த திருநங்கை பாண்டியம்மா, தன்னம்பிக்கையுடன் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த உள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் திருநங்கை பாண்டியம்மா (வயது 29). சாமி ஆடி குறி சொல்லி வந்த இவர், தற்போது உள்ளாட்சி தேர்தலில் களம்கண்டுள்ளார். குடியாத்தம் ஒன்றியம், மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 9-வது வார்டில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அவர், தற்போது தனக்காக ஒதுக்கப்பட்ட சின்னமான கைகடிகாரம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்க்கான காரணம் குறித்து திருநங்கை பாண்டியம்மாவிடம் கேட்டபோது, “நான் சார்ந்த திருநங்கை சமூகம் பல்வேறு இடங்களில் உதாசினப்படுத்தப்படுகிறது. பலர் எங்களை போன்ற மாற்று பாலினத்தவர்களை புரிதலில்லாமல் வீடுகளில் சேர்க்க மறுக்கின்றனர். அதேநேரம் திருநங்கை சமுகத்தை சேர்ந்தவர்கள் இன்றைய காலகட்டத்தில் அரசு துறைகள், காவல் துறை, மருத்துவ துறை என பல துறைகளில் சாதித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற பலரிடம் அலைந்து திரிந்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களும் அதிகாரிகளும் எங்கள் சமூகத்தை சேர்ந்தோரை அலைக்கழிக்கிறார்கள்.
தொடர்புடைய செய்தி: காஞ்சிபுரம்: தெருக்கூத்து கலைஞர்களுடன் சென்று பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர்
ஆகவே தான் எங்களுக்கான உரிமையை பெற முதல் முயற்சியாக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுகிறேன். முன்னதாக நான் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எனக்கு வாய்ப்பளித்தது இந்திய குடியரசு கட்சிதான். என்னை அங்கீகரித்த இக்கட்சிக்காக, முழு நம்பிக்கையுடன் நான் தொடர்ச்சியாக வாக்கு சேகரித்து வருகிறேன்.
பரப்புரைக்கு போகும் இடத்தில் எல்லாம் என்னை மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பலர் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர் அதை நான் செய்வேன் என உறுதி அளித்தும் வருகிறேன். நான் வெற்றி பெற்றால் எனது திருநங்கை சமூகத்துக்கான நலன்களை செய்தோடு மட்டுமில்லாமல், பெண்கள் நலன் சார்ந்தும் பொது மக்கள் நலன் சார்ந்தும் அனைத்து திட்டங்களையும் செய்வேன்” என்றார். உறுதியோடும் வெற்றிக்கனவோடும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் களம் காணும் பாண்டியம்மா நிச்சயம் தன்னம்பிக்கை மனுஷிதான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்