கர்ப்பமாக இருந்த வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் பிரசவத்திற்கு அஞ்சி கருவைக் கலைக்க நாட்டு மருந்தை உண்டதால் சிசு இறந்து கர்ப்பப்பையிலேயே தங்கி சீல் பிடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. ஒடிசாவை சேர்ந்த இவர் தனது மனைவி குமாரி கஞ்சக்காவுடன் தங்கி இருந்து கட்டட தொழிலில் ஈடுபட்டு வந்தார். கர்ப்பிணியாக இருந்த குமாரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்தின் போது இறந்த தனது அண்ணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஒடிசா சென்றிருந்தார். அப்போது உறவினர்கள் கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் குமாரியிடம் பேசியுள்ளனர்.
இதனால் மன ரீதியில் அச்சமடைந்த குமாரி பிரசவத்தின் போது தாமும் இறந்துவிடுவோமோ என அஞ்சி வயிற்றில் வளர்ந்து வந்த 4 மாத சிசுவைக் கலைக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனால் கணவருடனும் ஆலோசிக்காமல் தோழி ஒருவரின் அறிவுரையைக் கேட்டு கருக்கலைப்பு செய்வதற்கு என கொடுக்கப்பட்ட நாட்டு மருந்தை உண்டதாக தெரிகிறது.
ஆனால் அம்மருந்தை உண்டது முதலே அடிக்கடி நோய் வாய்ப்பட்டுள்ளார் குமாரி. ஆனால் அதனை கணவரிடம் கூறாமல் அலட்சியமாக இருந்த நிலையில் திடீரென கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீர் வெளியேறாமல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே தான் கருக்கலைப்புக்காக நாட்டு மருந்தை உட்கொண்டதை குமாரி தனது கணவனிரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் குமாரியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்தை உண்ட குமாரிக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவே வழக்கம் போல பணிகளைத் தொடர்ந்துள்ளார். ஆனால் சில தினங்களிலேயே மீண்டும் குமாரிக்கு உடல் நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குமாரியின் கர்ப்பப்பை சீழ் பிடித்து மிகவும் மோசமடைந்திருப்பதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கணவரின் ஒப்புதலோடு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குமாரியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமாரியின் சகோதரி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே கணவர் பிரதாப் உள்காவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கருக்கலைப்புக்காக குமாரி நாட்டு மருந்து உட்கொண்ட சில தினங்களிலேயே சிசு இறந்து விட்டதும், ஆனால் இறந்த சிசு வெளியேறாமல் கர்ப்பையிலே தங்கி சீல் பிடித்ததே குமாரியின் இறப்புக்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்