Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நெல்லை: ஒரு கி.மீ தூரம் தள்ளி மாற்றப்பட்ட கண் மருத்துவமனை பஸ் டாப் - பொதுமக்கள் திணறல்

கடந்த 30 வருடமாக இயங்கிவந்த நெல்லை மாவட்ட அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை, ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி மாற்றி அமைத்துள்ளது காவல்துறை. இதனால் கண் சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வருவோரும் முதியவர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

1988ம் ஆண்டில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது இந்த அரவிந்த் கண் மருத்துவமனை. நெல்லை சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள கொக்கிரகுளம் செல்லும் வழியில் முதல் பேருந்து நிறுத்தத்தில், இம்மருத்துவமனை உள்ளது. இந்த கண் மருத்துவமனைக்கு திருநெல்வேலி மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கண் சிகிச்சைக்காக நாள்தோறும் பலர் வருவதுண்டு. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் இலவசமாகவும் கண் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு வரக்கூடிய கண் சிகிச்சை நோயாளிகளின் நலனுக்காக மருத்துவமனையின் வாசலில் தற்காலிக பேருந்து நிறுத்தம் கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வந்தது.

image

அந்த நிறுத்தம் வழியாக, அம்மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு வருபவர்கள் கண்களில் கட்டுகளுடன் வாசலில் வந்து நின்று பேருந்தில் ஏறி ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால் இப்போது திடீரென பேருந்து நிறுத்தத்தை தாமிரபரணி ஆற்று பாலத்தை தாண்டி கொக்கிரகுளம் ஊரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றி விட்டதாக காவல்துறை அறிவிப்பு பலகை வைத்து இருக்கிறது. போக்குவரத்து காவலர்கள் அங்கேயே நின்றுக்கொண்டு மக்களுக்கு இதை வாய்மொழியாக அறிவித்த வண்ணம் இருந்தனர்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த மாற்றம், பல சாமானியர்களுக்கு தெரியவே இல்லை. குறிப்பாக முதியவர்களால் அங்கு நிலவிய இந்த மாற்றத்தை உணரமுடியவில்லை. அப்படியாக விஷயம் தெரியாமல் பலரும் பல மணி நேரம் இங்கு பேருந்து நிற்கும் என காத்துக்கொண்டே இருந்த சம்பவமும் நடந்தது. பின் போக்குவரத்து காவலர்கள் வந்து சொன்னபிறகே, அவர்கள் அங்கிருந்து அடுத்த நிறுத்தத்துக்கு சென்றனர். இதனால் கண்களில் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து கண் கட்டுகளுடன் வருவோர் உட்பட அப்பகுதியில் வரும் இளைஞர்கள், மாணவ மாணவியர், வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக இருக்கும் கொக்கிரகுளம் வரை நடந்து சென்று காத்திருந்து பேருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

image

இதற்கு முன்பு ஒருமுறை நெல்லையில் ‘மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம்’ மற்றும் ‘ஆயுதப்படை மைதானம் & மாவட்ட தீயணைப்பு அலுவலகம்’ ஆகியவை இயங்கும் சாலையில் இயங்கிவரும் பார்வை குறைபாடு உடையோர்களுக்கான பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அச்சாலையில் பேருந்து போக்குவரத்தையே நிறுத்தியது மாவட்ட நிர்வாகம். அப்படியிருக்க இன்று வயதானவர்களும், கண் சிகிச்சை எடுத்தவர்களும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கண்களில் கட்டுகளுடன் நடப்பதற்கான ஒரு திட்டத்தை அதே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் எனக்கூறும் பொதுமக்கள், இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

image

ஏற்கெனவே, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் என புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகரத்தில் வேறொரு இடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக பேருந்து நிறுத்தம் இயங்கி வருகிறது. அங்குசென்றுதான் மக்கள் பயணிப்பதுண்டு. இதனால் மக்கள் பல்வேறு இடர்களை நாள்தோறும் சந்தித்து வந்தாலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேறிய பிறகு தங்கள் பிரச்சனை தீரும் என்று சகித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிலையத்தையும், மாவட்ட நிர்வாகம் இப்படி இல்லாமல் ஆக்கியிருப்பது தங்கள் வாழ்வியலை மிகவும் பாதிக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக உறுதியள்ளித்துள்ளார். என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- நெல்லை நாகராஜன் | ஒளிப்பதிவாளர்: சங்கர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்