மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே, விநாயகர் சதுர்த்தி, உறியடி உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா மகாராஷ்டிராவில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த முறை விநாயகர் சதுர்த்தி, அதையொட்டி நடைபெறவுள்ள உறியடிக்கு மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டன போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், பாஜகவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள மற்றும் மகாராஷ்டிர அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின்போது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
தேவையெனில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை பாஜகவினருக்கு காட்டுகிறோம் என்றும் அவர் பதில் அளித்துள்ளார். மேலும், தனது அரசு இந்துக்களுக்கு எதிரானதல்ல, கொரோனாவுக்குதான் எதிரானது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்