தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்த நபரை அதிரடியாக கைது செய்திருக்கிறது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.
‘ஒருவரை ஏமாற்ற அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்கிற சினிமா வசனம் மிகப் பிரபலம். ஆசை காண்பித்து மட்டுமல்ல இரக்கத்தைப் பெற்றும் பணம் பறிக்கலாம் என நிரூபித்துள்ளார் மோசடி நபர் ஒருவர். இவர் தாற்போது காவல்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறார். அண்மையில், மூத்த வழக்கறிஞராகவும், திமுக இளைஞர் அணியின் மாநில துணை செயலாளருமான ஜோயலை, சிவக்குமார் என்ற அந்த மோசடி நபர் சமீபத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தனது குழந்தை மரணப் பிடியில் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி, மருந்து சீட்டு , குழந்தையின் புகைப்படங்களை அனுப்பி உதவி கேட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை அலுவலகத்தில் மனு அளித்ததாகவும், அங்குள்ளவர்கள் தங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாகவும் ஜோயலிடம் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... அமேசான், ஃபிளிப்கார்டில் வேலை இருப்பதாகக் கூறி நூதன பண மோசடி: எச்சரிக்கும் காவல்துறை
குழந்தையின் புகைப்படத்தைக் கண்டு மனம் இறங்கிய ஜோயல், தனது வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் ரூபாயை சிவக்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். பணம் வந்து சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த அவரைத் தொடர்பு கொண்டபோது, சிவக்குமாரின் செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரில் விசாரணையைத் தொடங்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், புதுச்சேரியில் பதுங்கியிருந்த சிவக்குமார் என்ற ஜேக்கப்பை கைது செய்தனர். தொடர் விசாரணையில் ஜோயல் மட்டுமின்றி தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்களே அவரின் மோசடி பட்டியலில் இருபப்தைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான அவர், தனது வருமானம் மொத்தத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். ஒருநாள் திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, தனது நிலையை எடுத்துச் சொல்லி அரசியல் பிரமுகர் ஒருவரிடம் உதவி கேட்டு பணம் பெற்றதும், அதுவே சாதகமாகிப்போய் உள்ளது அவருக்கு. பின்னாளில் இதையே தனது ஸ்டைலாக மாற்றி, ஆன்லைன் ரம்மி விளையாட பணம் தேவைப்படும்போதெல்லாம் சமூக வலைதளங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என செல்லும் இடமெல்லாம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி, பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி நபர் சிவக்குமார் மீது இரக்கப்பட்டு, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் அண்ணாமலை 17 ஆயிரம் ரூபாயும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 5 ஆயிரமும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் 8,600 ரூபாய் என 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களே பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். இந்த பணத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மியில் வைத்து சூதாடி இழந்த சிவக்குமாரை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்