தமிழ்நாடு என பெயரிடப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்கிற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ள சூழலில், தமிழ்நாடு நாளின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
நவம்பர் ஒன்றாம் நாள் உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை ஏற்கின்ற போதிலும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18ஆம் தேதியைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பல்வேறு தரப்புகளிலிருந்தும் மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிஷாவாகும். 1935ஆம் ஆண்டில் ஒடிஷா தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, தற்போதைய தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை கொண்டிருந்த மெட்ராஸ் ராஜதானியையும் பிரிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்தது.
பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி, நேசமணி, சங்கரலிங்கனார் போன்ற தமிழகத் தலைவர்களும் மொழிவாரி மாகாண கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தனர். ராஜாஜி், கோல்வாக்கர் போன்றோர் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், போராட்டங்கள் தீவிரமடைந்தன.
1953ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இக்கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக நாடு பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த பகுதிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகளின் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
அச்சமயம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார். 'உயிர் பெரிதன்று, மானமே பெரிது.' எனத் தனி ஆளாக போராடிய அவரது உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமானது. உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அண்ணா, ம.பொ.சிவஞானம், காமராஜர், ஜீவானந்தம் போன்றோர் கோரிக்கை விடுத்தும் சங்கரலிங்கனார் செவிமடுக்கவில்லை. இதனால் உடல்நிலை மிக மோசமாகி, 76ஆவது நாள் உயிர் நீத்தார், சங்கரலிங்கனார்.
அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு இயக்கங்கள் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தன. 1962ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கை வலியுறுத்தி தனி மசோதா கொண்டுவந்தபோது அது நிராகரிக்கப்பட்டது. 1964 ஜனவரி மாதத்தில் மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதிலும் முடிவு கிட்டவில்லை.
1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பின்னர், ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டு அதாவது, 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதனிடையே, மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் நாளை, தமிழகம் தவிர்த்த மற்ற மாநில மக்கள் தங்களின் மாநில நாளாகக் கொண்டாடி வந்ததால் அந்த நாளை தமிழ்நாடு நாளாகவும் முந்தைய அதிமுக அரசு அறிவித்தது.
இதையும் படிக்கலாம்: தீபாவளி அன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்