Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஓடிடி திரைப் பார்வை 7: Aakashavaani - வித்தியாசமான திரை அனுபவம் விழைவோருக்கு நல்விருந்து!

நவீனத்துக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையே இருக்கும் ஒரு நூலைப் பிடித்து, அதன் இரு பக்கங்களில் வாழும் இரு வேறு வாழ்வியல் முறைகளைக் கொண்ட மனிதர்களை எழுதி, வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதைதான் ஆகாஷவாணி (Aakashavaani). சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் இந்த தெலுங்கு சினிமாவை அஸ்வின் கங்காராஜு இயக்கியிருக்கிறார்.

image

ரேடியோ பெட்டிகளின் பயன்பாடு பெருகியிருந்த 80 காலகட்டத்தில் இக்கதை சொல்லப்படுகிறது. ஆந்திராவின் ஒரு மலைக்கிராமத்தில் சிறிய மக்கள் குழு வசிக்கிறது. நவீன வெளியுலகத் தொடர்பு சற்றும் இல்லாத அம்மக்கள் தங்களின் கடவுளாக தங்களை ஆளும் ஜமீந்தாரரை நினைக்கின்றனர். ஜமீந்தாரராக நடித்திருக்கும் வினய் வர்மா தன்னை நம்பி இருக்கும் மக்களின் மூடநம்பிக்கைகளை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும், அதிலிருந்து மக்கள் மீளும் ஒரு நன்நாளை நோக்கியும் நகர்கிறது திரைக்கதை.

இந்தக் கதையை நேரடியாக இப்படிப் புரிந்துகொள்ளலாம். அதேநேரம், நவீனத்தின் வருகையானது மூடநம்பிக்கைகளை உடைக்கும் திறப்புகளை எப்படித் தந்தது என்கிற வழியிலும் இந்தக் கதையினைப் புரிந்துகொள்ளலாம். அருகாமை நகரில் அறிவியல் ஆசிரியராக பணிசெய்கிறார் சந்ராமாக வரும் சமுத்திரக்கனி. அவர் தூக்கி எறிந்த ஒரு ரேடியோ, ஜமீந்தாரர் கட்டுப்பாட்டில் இருக்கும் வனவாழ் மக்களிடம் வந்து சேர்கிறது. அந்த ரேடியோவை கடவுளாக நம்பத் துவங்குகிறார்கள் அம்மக்கள். ரேடியோவின் வழியே கேட்கும் வார்த்தைகளை கடவுளின் சொற்களாக நினைக்கின்றனர் அவர்கள்.

image

இந்த ஐடியாவின் முன்னோடி சினிமாவாக 'காட் மஸ்ட் பி கிரேஸி' (God must be crazy) என்ற சினிமாவைக் கூறலாம். ஜாமி உயிஸ் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு வெளியான 'காட் மஸ்ட் பீ கிரேஸி' என்ற சினிமாவும் ஆகாஷவாணியைப் போலவே நவீன உலகில் வாழும் மனிதர்களிலிருந்து வனவாழ் மக்கள் பிரிந்து நிற்கும் புள்ளியினை இணைத்து சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒரு கோககோலா பாட்டிலைக் கொண்டு உருவாக்கட்டிருக்கும் அப்படத்தின் சில காட்சிகளைப் போலவே 'ஆகாஷவாணி'யில் ரேடியோவைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஆகாஷவாணி கதை சொல்லப்பட்டிருக்கும் காலத்தை அழகாக திரையில் உருவாக்கியிருக்கிறது படக்குழு. இரணியகசிபு, பக்த பிரகலாதன் கதையினை ரேடியோ மூலம் கேட்கச் செய்து, மக்களுக்கு திறப்புகளைத் தரும் காட்சி புதுமை. சமுத்திரக்கனியின் பங்களிப்பு ஆகாஷவாணியில் மிகச் சிறப்பாகவும் வெகு பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது. இப்படத்தில் நடித்திருக்கும் பலரும் நாடக நடிகர்கள் என்பதால் அனைவரின் நடிப்பும் படத்திற்கு நல்ல பலமாக அமைந்துவிட்டது.

image

ட்ராக்டர் முகப்பு விளக்கின் ஒளியினை மரண நட்சத்திரமாக நம்பும் மக்கள், முதல் காட்சியில் காந்தம் கொண்டு மாணவர்களுக்கு சமுத்திரக்கனி பாடம் சொல்லும் காட்சியினை அதே அறிவியல் கொண்டு இறுதிக்காட்சியில் இணைத்த விதம் உள்பட பல சுவாரஸ்யமான விஷயங்கள் இப்படத்தில் உண்டு. அதேநேரம் என்னதான் வெளியுலகத் தொடர்பு இல்லாத மக்கள் என்றாலும் அவர்களை இவ்வளவு முட்டாள்களாக காட்டியிருக்க வேண்டாம். அது கொஞ்சம் ஓவர் டோஸாக அமைந்திவிட்டது. தவிர ரேடியோவானது அம்மக்களை வந்து சேரும் காட்சியில் அடர்த்தி இல்லை. சிறுவனுக்கு ரேடியோவுக்குமான உறவைச் சொல்லும் காட்சிகள் ஓகே ரகம்.

image

காலபைரவாவின் பின்னணி இசை அருமை. படத்தின் மிகப் பெரிய பலம் சுரேஷ் ராகுடுவின் ஒளிப்பதிவு. இயக்குநர் அஸ்வின் கங்காராஜுடன் இணைந்து சந்தீப் ராஜ், சாய் குமார் ரெட்டி ஆகியோரும் திரைக்கதை எழுதி இருக்கின்றனர். கொஞ்சம் குறைகளையும் நிறைய நிறைகளையும் கொண்ட சினிமாவாக 'ஆகாஷவாணி' அமைந்திருக்கிறது. வித்தியாசமான திரை அனுபவத்தை பெற நினைப்பவர்களுக்கு 'ஆகாஷவாணி' நல்ல விருந்தாக இருக்கும். இந்த ஆண்டு வெளியான தெலுங்கின் நல்ல சினிமாக்கள் பட்டியலில் 'ஆகாஷவாணி'க்கும் இடமுண்டு.

முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை 6: Sardar Udham - உலராத ரத்தச் சரித்திரமும், உன்னதப் போராளியும்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்