நேருவின் மகள், நாட்டின் முதல் பெண் பிரதமர், இந்தியாவின் இரும்புப் பெண்மணி, பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து தனி நாடாக உருவாகக் காரணமானவர், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியவர், தனது பாதுகாவலர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டவர் என இந்திய அரசியலில் இந்திரா காந்தி ஏற்படுத்திய சுவடுகளும் தாக்கமும் காலத்தால் அழியா வரலாறு.
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, கமலா தம்பதியினரின் ஒரே வாரிசான இந்திரா பிரியதர்சினி நவம்பர் 19, 1917 அன்று அலகாபாத் நகரில் பிறந்தார். தனது தந்தையும், தாத்தாவும் (மோதிலால் நேரு) சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்கள் என்பதால் இயல்பாகவே இந்திராவின் ரத்தத்தில் தேசப்பற்று கலந்திருந்தது. பெரோஸ் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோது, காதல் மலர்ந்ததை அடுத்து, அவரை மணம் முடித்தார். இந்திரா-பெரோஸ் காந்தி தம்பதிக்கு ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என 2 மகன்கள் பிறந்தனர்.
1947-இல் நாடு சுதந்திரம் பெற்று, 1952ஆம் ஆண்டு நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முதல் பிரதமராக இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு பதவியேற்றுக் கொள்ளவே, தந்தையின் அரசியல் வாழ்க்கையை அருகிலிருந்து கற்றுக்கொண்டார். கணவர் பெரோஸ் காந்தி 1960ஆம் ஆண்டிலும், அதைத்தொடர்ந்து தந்தை நேரு 1964ஆம் ஆண்டிலும் காலமான பிறகு, முழு நேர அரசியலில் குதித்தார் இந்திரா.
நேரு மறைவிற்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் இந்திரா காந்தி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், லால்பகதூர் சாஸ்திரி திடீரென காலமாகவே நாட்டின் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து, நாட்டின் 3வது பிரதமராக, முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
1967, 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார். வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை ஒழித்தது, நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தது, வங்க தேசத்திற்கு படை அனுப்பி, அந்நாட்டிற்கு விடுதலையை பெற்றுத் தந்தது, அணு ஆயுத சோதனை நடத்தி இந்தியாவை அணு ஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தது, வெளியுறவுக் கொள்கையில் புதிய பாதையை வகுத்தது என இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அவரது சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிற தைரியமும் இந்திராவுக்கு இருந்தது. தேர்தலில் தோல்விக்குப் பிறகும் மூன்றே ஆண்டுகளில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்தார் அவர்.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 374 இடங்களில் மகத்தான வெற்றியடைந்தது. ஆனால் அச்சமயத்தில் இந்திரா காந்தி புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் தனியாக காளிஸ்தான் கோரி கிளர்ச்சி தொடங்கினார்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பெரிய சவாலாக அந்த இயக்கம் வளர்ந்து வருவதாக கருதியது அரசு.
1984-ம் ஆண்டில் பொற்கோவிலில் ஆயுதங்களை குவித்துக்கொண்டு பதுங்கியிருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை ‘ஆபரேஷன் புளு ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கியதன் மூலம் சீக்கியத் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது. ஆனால் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது சீக்கியர்கள் மத்தியில் சர்ச்சைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்திராவின் சீக்கியப் பாதுகாவலர்களால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரித்தது. உயிரையே இழக்க நேர்ந்தாலும் மதத்தின் அடிப்படையில் தனது பாதுகாவலர்களை மாற்ற இந்திரா காந்தி மறுத்துவிட்டார். இச்சூழலில், பொற்கோயில் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்திரா காந்தியின் இரு சீக்கிய மெய்காவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். தேசம் பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார் இந்த 'இரும்புப் பெண்மணி'.
தமது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததோடு மட்டுமில்லாமல் அதை எதிர்கொள்ளவும் தயாராகவே இருந்தார் இந்திரா காந்தி.
இந்திரா கொல்லப்படுவதற்கு முதல் நாள் மாலையில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “இன்று நான் இங்கு இருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னை கொல்வதற்கு எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்த காலத்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்