புலி எக்காரணக் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற T23 என அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கொல்லி புலியை பிடிக்க தமிழக மற்றும் கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் பல குழுக்களாகப் பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன் கேமராக்களை வனத்திற்குள் பறக்க விட்டு, புலி இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். புலி எங்கு இருக்கிறது என்பது தெரியாததால் புலி வந்து சென்றபோது இருந்த கால்தடங்களை வைத்து புலியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை வகையை சேர்ந்த அதவை என்ற நாயையும் வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் புலி நடமாட்டம் இருக்கக்கூடிய இடத்தில் 2 மாடுகளை மரத்தில் கட்டி வைத்து, அதன் அருகே பரண் அமைத்து புலியை கண்காணிக்கின்றனர். மசினகுடி பகுதியில் புலியை கண்காணிக்கும் வகையில் மேலும் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மொத்தமாக 55 கேமராக்கள் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கிறார்கள். ஆட்கொல்லி புலியுடன் மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதால் தவறுதலாக அதனை சுட்டு விட வேண்டாம் என அதிரடி படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைத்தளங்களிலும் காட்டுயிர் ஆர்வலர்கள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் புலி எக்காரணக் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். T23 புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிக்க: ஆட்கொல்லி புலிகளை சுட்டுக்கொல்வதுதான் தீர்வா? - ஒரு பார்வை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்