உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரில் சென்ற போது விவசாயிகள் காரினை மறித்து கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்துள்ளனர்.
விவசாயி ஒருவர் சுட்டுக் கொலை?
அப்போது விவசாயிகள் மீது காரை ஏற்ற முயன்றதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. அதோடு அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கவும், அவரது மகனை கைது செய்யவும் விவாசயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடத்தில் எனது மகன் இல்லை - அமைச்சர்
இந்த நிலையில் சம்பவம் நடத்த இடத்தில் தனது மகன் இல்லை என அமைச்சர் மிஸ்ரா விளக்கம் கொடுத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் அஜய் மிஸ்ரா.
நாளை லக்கிம்பூர் செல்கிறார் பிரியங்கா காந்தி!
லக்கிம்பூர் பகுதியில் வன்முறை வெடித்துள்ள நிலையில் உ.பி மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை அங்கு செல்கிறார்.
வன்முறைக்கு கண்டனத்தை தெரிவித்த மம்தா!
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இந்த வன்முறைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற வன்முறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். விவாசயிகளிடையே பாஜகவின் அக்கறையின்மையை பார்த்து என் மனம் வலிக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளனர். நமது விவசாயிகளுக்கு எப்போதுமே எங்களது ஆதரவு கரம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்