டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை சந்தித்திராத பிரச்னையில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. சூப்பர் 12 சுற்றில் அடுத்தடுத்து இரண்டு படுதோல்விகளை கண்டுள்ள இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்திய அணிக்கு இன்னும் 3 போட்டிகள் பாக்கியிருக்கிறது. அந்தப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிப்பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் தான் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் பிரதான அணிகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி சகஜமானதுதான் என்றாலும் இந்தியா சந்தித்த இரண்டு தோல்வியும் மிகவும் மோசமாகவே இருந்தது. தோல்வியிலும் ஒரு போராட்டம் வேண்டாம் அது இல்லாமல்போனதுதான் பெரும் மைனசாக பார்க்கப்படுகிறது. அதுவும் கோலி போல ஒரு ஆக்ரோஷமான கேப்டன் இருக்கும்போது எப்படி இந்தியா இப்படியொரு தோல்வியை சந்திக்கிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்தப் போட்டி தொடருக்கு முன்பாக முன்னாள் கேப்டனான தோனியை ஆலோசகராக நியமித்தது பிசிசிஐ. ஆனால் இது எதுவுமே பிரோயஜனமாகாமல் இருப்பதுதான் வேதனை.
அணி தேர்வில் இருக்கும் சிக்கல்
இந்தியா டி20 உலகக் கோப்பையின் பயிற்சி போட்டியில் மிகச் சிறப்பாக ஆடியது. அதவும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு பெரும் அணிகளை வீழ்த்தி புருவத்தை உயர்த்த வைத்தது. ஆனால் தன்னுடைய முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் பவுலிங் செய்ய முடியாத ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கியது, அதேபோல சிறந்த பவுலராக இருந்தாலும் கடந்த சில மாதங்களாக பார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாரை களமிறக்கியது போன்றவை பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
முன்னாள் வீரர்கள் பலரும் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை நீக்க வேண்டும் என ஆலோசனைக் கூறியும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். அத்துடன் பேட்டிங் செய்தார், பவுலிங்கும் செய்தார். ஆனாலும் எந்தப் பலனுமில்லை.
புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்தது. ஆனால் 111 ரன்களை மட்டுமே இலக்காக வைத்துவிட்டு பவுலர்கள் மேஜிக் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பதும் தவறு. பேட்டிங்கின் ஆர்டரை மாற்றியது. சூர்யகுமார் யாதவ் உடல்நிலை சரியில்லை என்பதால் இஷான் கிஷனை ஆடும் லெவனில் சேர்த்தனர். ஆனால் பல ஆண்டுகளாக தொடக்க வீரராக இருக்கும் ரோகித் சர்மாவை இறக்காமல் இஷான் கிஷனை இறக்கியது இந்தியா. முடிவில் 4 ரன்களில் அவர் அவுட்டானார்.
இஷான் கிஷனை சேர்த்தது தவறில்லை, ஆனால் அவரை தொடக்க வீரராக களமிறக்கியது முதல் கோணல் முற்றும் கோணலாகவே அமைந்தது. ஐபிஎல் டி20 போட்டிகளை நாம் நடத்தினாலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வைத்து இந்திய அணியாக பார்க்கும்போது இந்த டி20 பார்மெட்டில் நாம் மேலும் மேம்படுவது முக்கியம் என்றே தோன்றுகிறது.
அதுவும் சர்வதேச டி20 போட்டிகளில் வெறும் 14 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமியை அணியில் சேர்ப்பது எல்லாம் எந்த வகையில் நியாயம் என்றே புரியவில்லை. முகமது சிராஜை அவருக்கு பதிலாக களமிறக்கலாம். அதேபோல சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பெரும் எதிர்பார்ப்போடு சென்றாலும் இதுவரை விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரன்களை சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 20 ஓவர்களில் 160 முதல் 170 ரன்கள் சேர்த்தாலும் நாம் வெற்றிப்பெற்றுவிடுவோம் என எண்ணிவிட முடியாது, ஆனால் வெற்றிக்காக போராடலாம். ஒருவேளை அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தால் இதுசாத்தியமே.
இந்த சிறிய பார்மெட்டில் அசுர வேகத்துடனும், அபார ஆட்டத்திறனும் இருக்க வேண்டும். நம் அணியில் இருக்கும் அனைவரும் அபார திறமைசாலிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் இப்போதுள்ள டி20 ஆட்டத்துக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றி அமைக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் உருமாற வேண்டும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் "டி20 கிரிக்கெட்டில் இந்தியா 10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது" என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கொந்தளித்தாலும், அதுதான் உண்மை என்பதை நாம் மறுக்கமுடியாது. இன்னமும் நாம் வெல்லலாம், இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டெழும் என நம்பலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்