இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி வெற்றிப்பாதைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் மற்றும் ரச்சின் ரவீந்திரன் இருவரும் இணைந்து தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை காப்பாற்றினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், கடைசி 12 ஓவர்களை திறம்பட சமாளித்து ஆட்டத்தை சமன் செய்தனர். குறிப்பாக ரவீந்திரா 91 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து, டிரா ஆனதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மைதானம் சுழலுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்திய அணியில் ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவர்கள் வழங்கப்பட்டது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் கடைசி செஷனில் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் வெற்றிபெற முடியவில்லை.இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு சிறிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் போட்டி மிக சுவாரஸ்யமாக அமைந்தது. இப்போட்டியில் அலசப்பட வேண்டிய சில அம்சங்களும் உள்ளன.
அறிமுக வீரராக அபார சாதனை
அறிமுக வீரராக இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர், முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து 2வது இன்னிங்சிலும் அவர் அரை சதம் அடித்தார். இதன் மூலமாக, அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை ஷ்ரேயாஸ் வசமாகி உள்ளது. இந்த போட்டியில் முதல் 2 இன்னிங்ஸிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய போது ஷ்ரேயாஸ் ஐயர் தான் காப்பாற்றினார். இதனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் இடம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ரஹானேவின் சொதப்பல் ஆட்டம்
2016ஆம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் சராசரி வெறும் 36.93 மட்டுமே. கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே அவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. இங்கிலாந்து தொடருக்குச் சென்ற ரஹானே 7 இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.57 சராசரி வைத்தார். அதிகபட்சமாக 61 ரன்களை ரஹானே சேர்த்தார். ஆனால், ரஹானேவை விட ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ராவின் சராசரி இந்தத் தொடரில் அதிகமாக இருந்தது.
இங்கிலாந்து தொடருடன் ரஹானே அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருப்பார். ஆனால், லாட்ர்ஸ் மைதானத்தில் அரை சதம் அடித்தபின் தேர்வுக் குழுவினரின் நம்பிக்கையை அவர் பெற்றார். மேலும் கேப்டன் விராட் கோலி மற்றும் டி20 கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் அணியை தற்காலிகமாக வழிநடத்தும் பொறுப்பு ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமே 39 ரன்கள் எடுத்திருப்பது ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் பலவீனமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது.
டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் விராட் கோலி தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியிலும் ஃபார்முக்கு வராவிட்டால், அணியிலிருந்து ரஹானே ஒதுக்கப்படுவது உறுதியாகிவிடும்.
நீல் வாக்னரை தேர்வு செய்யாதது ஏன்?
இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வின் இருவரும் தலா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். மறுபுறம், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. டிம் சவுதி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கைல் ஜேமிசன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்து 3 சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடினாலும் அவர்களிடமிருந்து தரமான பவுலிங் வெளிப்படவில்லை என்பது தெரிந்தது.
இப்போட்டியில் அணியின் ஆடும் லெவனில் நீல் வாக்னர் இடம்பெறாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போதைக்கு நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் பவுன்சர்களை வீசித் தாக்குவது போல் வேறு பவுலர்கள் இல்லை. அப்படியொரு துல்லியமாக பவுன்சர்களை வீசும் நீல் வாக்னரை தேர்வு செய்யாததை குறித்து கேன் வில்லியம்சன் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்