சென்னையில் இயல்பை விட 83சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு கொட்டிய மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரே மாதத்தில் 105 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த மழைப்பொழிவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் 7 ஆம் தேதி ஒரே இரவில் நுங்கம்பாக்கத்தில் 20 சென்டிமீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு இருந்தது. அதுவே 2015ஆம் ஆண்டில் ஒரே இரவில் 25 சென்டிமீட்டர் மழை பெய்ததே அதிகபட்சமாக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை 123 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதில், நவம்பர் மாதத்தில் மட்டும் 102 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் கடந்த 200 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 சென்டிமீட்டர் மழை பெய்தது அதிகபட்சமாக நவம்பர் 7ஆம் தேதி 21 சென்டிமீட்டர், 11ஆம் தேதி 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, சென்னை மாவட்டம் முழுவதும் நவம்பர் மாதத்தில் சராசரியாக 91 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 29 வரை இயல்பான மழை அளவு 61 சென்ட்மீட்டராக இருக்கும் நிலையில், 112 சென்ட்மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இதன்மூலம் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்