Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திரைப் பார்வை: ஃபேமிலி டிராமா - ரத்தம் தெறிக்கும் த்ரில்லர் சினிமா!

ஓடிடி தளங்களில் எத்தனையோ புதுப்புது ஜானர்களில் சினிமாக்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. காலம்காலமாக பின்பற்றிவந்த நம்பிக்கைகள் பலவற்றை தகர்க்கும் விதத்திலும் பல சினிமாக்கள் உருவாகத் துவங்கிவிட்டன. குடும்பம் என்றால் தெய்வீகம், தாய் என்றால் புனிதம் போன்ற ஒரு கோண பிம்பங்கள் பலவும் ஓடிடி தளங்கள் கொடுக்கும் சுதந்திரத்தினால் தகர்க்கப்படுகின்றன. இதுபோல குடும்ப அமைப்பின் மீது சினிமா வரைந்து வைத்திருந்த சித்திரத்தை க்ரைம் த்ரில்லர் பாணியில் நொறுக்கிவிட்ட சினிமாதான் 'ஃபேமிலி டிராமா' (Family Drama).

image

மெஹர் தேஜ் எழுதி இயக்கி இருக்கும் இந்த தெலுங்கு சினிமாவில் (தமிழ் டப்பிங்கும் உண்டு) சுஷாஸ், தேஜ கஷரப்பா, பூஜா கிரண், ஸ்ருதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது எப்போதும் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறார் தந்தை. அவருடைய இருப்பு அவரது மனைவிக்கும் அவரது மகன்களுக்கும் பெரிய இடையூறாக உள்ளது. இந்நிலையில், தந்தையைக் கொல்லவும் முடியாது; ஆனால், அவரது இந்த அதிகார அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தவும் வேண்டும் என்கிற நோக்கில் தாயுடன் சேர்ந்து மகன்கள் எடுக்கும் அதிரடி முடிவும், அதன் தொடர்ச்சியாக நிகழும் உயிர்ச் சேதங்களுமே இதன் திரைக்கதை. 'ஃபேமிலி டிராமா' எனும் இந்த சினிமாவிற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் ஷன்முக்தா பிரஷாந்த்.

ராமன், லட்சுமணன் என பெயரிடப்பட்டிருக்கும் மகன்களின் கதாபாத்திர வடிவமைப்பு நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கிறது. இரக்கம், குற்றவுணர்வு, மனிதாபிமானம் என எதுவுமற்ற மகன்களின் வன்முறை வெறியாட்டம் திரையில் உதிரமாக தெறிக்கிறது. "பார்ப்பதற்கு அப்பாவி போல தோன்றும் இந்த இளைஞன் தான்..." என செய்திகளில் சொல்வார்களே... அதுபோல ஓர் அப்பாவி சீரியல் கில்லராக வருகிறார் மூத்தமகன் ராமன்.

இக்கதாபாத்திரத்தில் படு வித்தியாசமான நடிப்பை வழங்கி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் சுஷாஸ். போதைப் பழக்கத்திற்கு அடிமையான ராமனின் நடவடிக்கைகள், அசாதாரணமான உடல்மொழி, வன்முறை நிகழ்த்தும் நேரங்களில் அவரது காதுகளில் தனிப்பட்ட முறையில் கேட்கும் கர்நாடக இசை என இந்த காமினேஷன் சர்க்கரைப் பொங்கலுக்கு தேங்காய் சட்னியை தொட்டுக் கொள்வதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த படு வித்தியாசமான காமினேஷனே நம்மை ஃபேமிலி டிராமாவோடு இன்னும் ஒன்றச் செய்கிறது. சுஷாஸின் நடிப்பு பயங்கரம்.

image

வெங்கட் ஆர்.ஷகமுரியின் ஒளிப்பதிவு ஒரு மேக மூட்டம் போல நம்மை ஆட்கொள்கிறது. பெரிய மெனக்கெடல் இல்லை. ஆனால் அவர் இந்த சினிமாவிற்கு வழங்கியிருக்கும் கலர் டோன் மிகப் பொருத்தமாக கதை சொல்கிறது. அஜய் மற்றும் சஞ்சயின் இசையும் இதற்கு பக்கபலமாக அமைகிறது.

மனித மனங்களின் குரூரம், வக்கிரம், உள்மன வன்முறையின் அப்பட்ட வெளி என நகரும் திரைக்கதையில் செண்டிமெண்ட்களுக்கு இடமில்லை. ஒரு சதுரங்க விளையாட்டுபோல குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் காய் நகர்த்தி காலி செய்யும் விதத்தில் பல திருப்புமுனை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இறுதிக் காட்சியில் தாய் அடிக்கும் அந்தர் பல்டி "அடங்கப்பா டேய்" என சொல்ல வைக்கிறது.

image

கட்டுப்பாடுகளற்ற, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட திறந்த மனதோடு இந்த த்ரில்லரை அணுகினால் ஏமாற்றம் இருக்காது. உலகமே நாடக மேடை... நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்பார்கள். அதற்கு ஏற்ப கதையும், ஃபேமிலி டிராமா என்ற பெயரும் மிகப் பொருத்தம். குழந்தைகள், இதய பலவீனமுள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டிய சினிமா. த்ரில்லர் மற்றும் சைக்கோ கதை விரும்பிகளுக்கு இது நல்ல ரத்தப் பொறியல் விருந்தாக இருக்கும்.

இப்படம் SONY Liv ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்