அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
அதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியிலிருப்பவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. முதுபெரும் அரசியல்வாதியான இவர், கட்சியின் சமீபத்தியே நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. பா.ஜ.கவுடன் கட்சித்தலைமை கூட்டணி அமைத்தது தொடங்கி பல்வேறு விவகாரங்களில் தலைமை மீது வருத்ததில் இருந்தார். இந்நிலையில், அண்மையில் தொண்டர் ஒருவருடன் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. தொடர் நிகழ்வாக கடந்த புதன்கிழமை நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அன்வர் ராஜாவுக்கு எதிராக சி.வி.சண்முகம் ஒருமையில் பேசியது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், ''அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதை வெறுமனே அவர் ஒற்றைத்தலைமையை விமர்சித்ததை மட்டும் வைத்து பார்க்க முடியாது. ஏற்கெனவே, அவர் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். கட்சி ஒற்றைத்தலைமையை நோக்கி செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்த பிறகு ஆங்கிலப்பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், 'கட்சி ஒற்றைத்தலைமை நோக்கி செல்ல வேண்டும்; சசிகலா கட்சிக்கு பலமாக இருப்பார். இரட்டை தலைமையில் நிறைய சிக்கல் இருக்கிறது; தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்' என பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். ஆகவே ஒருமையில் பேசியதற்கு பிறகு நடந்த சம்பவங்களையொட்டித்தான் இந்த நீக்கத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஓ.பி.எஸூக்கும், ஈ.பி.எஸூக்கும் கட்சி பலவீனமாவது குறித்து கவலையில்லை. கட்சியிலிருந்து இப்படியான எதிர்ப்பு குரல்கள் எழுவதற்கு முன்பே அவர்களை நீக்கிவிட வேண்டும் என கருதுகின்றனர். காரணம் அவர்களிடம் இரட்டை இலை இருக்கிறது. இரட்டை இலை இருப்பதால் தான் ஈ.பி.எஸூம், ஓ.பி.எஸூமே இணைந்து இருக்கின்றனர். இரட்டை இலை இல்லாவிட்டால் அவர்கள் எப்போதோ பிரிந்து வெளியே வந்திருப்பார்கள். ஆனால், இரட்டை இலை இருந்துமே தொண்டர்கள் கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கடந்தகால தேர்தல்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 33சதவீத வாக்குகளை அளித்த தொண்டர்கள், ஊராட்சி தேர்தலில் கவிழ்த்துவிட்டார்கள்.
இதன் மூலம் இரட்டை தலைமையில் நிலவும் பிரச்னையை தாங்க விரும்பவில்லை என தொண்டர்கள் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள். அதிமுக தன்னுடைய தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் இது தொடரவே செய்யும். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பவர்கள் மட்டும் உடனே கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மாணிக்கம் என்பவர் பா.ஜ.கவுக்கு சென்றார். அவரை கட்சியிலிருந்து இன்னும் நீக்காமல் வைத்துள்ளார்கள். தோழமை கட்சி அதிமுகவிலிருந்து ஒருவரை இழுத்துள்ளனர், அது குறித்து அந்த கட்சி கவலைப்படவேயில்லை. இரட்டை இலை இருப்பதால் நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என கட்சி தலைமை நினைக்கிறது. இப்படியே தொடர்ந்தால் கட்சி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் உணரவில்லை. இறுதியில் இரட்டை இலையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?'' என்று தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் தன்னை ஒரு ஜெயலலிதா, கருணாநிதியைப்போல தலைவராக உருவெடுக்க முயற்சி செய்கிறார். அதாவது, அண்ணா நிறுவனர் அவர் உருவாக்கிய கட்சியை கருணாநிதி பிடித்துக்கொண்டார். அதேபோல எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா பிடித்துக்கொண்டார். அப்படித்தான் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ஆசைப்படுகிறார். ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக செல்வதா? அல்லது சசிகலா, தினகரனுடன் இணக்கமாக செல்வதா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. சசிகலா குடும்பத்துடன் இணக்கம் காட்டினால் தன்னை டம்மியாக்கிவிடுவார்கள் என பயந்து, ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்னைக்கும் சரி, நாளைக்கும் சரி எப்போதும் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமியை சார்ந்து தான் நிற்பார். அவரால் அதை உடைத்து வெளியே வந்து அரசியல் செய்ய முடியாது. திருநாவுக்கரசர் மாதிரியோ, ஜெயலலிதா, வைகோ மாதிரியோ அரசியல் நகர்வை பன்னீர்செல்த்தால் செய்துவிட முடியாது. எடப்பாடி பழனிசாமியை சார்ந்து நிற்கிறார். அது தான் நடந்துகொண்டிருக்கிறது. இதை கணித்து தான் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தார். அன்வர் ராஜா ஒரு மூத்த அரசியல் தலைவர். இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக கட்சியிலிருந்தவர். அவர் நீக்கம் செய்யபட்டுள்ளார்.
கடந்த காலங்களிலும் சிறுபான்மையினர்களை கட்சியிலிருந்து நீக்கும் நடைமுறைகள் அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணியின் அழுத்ததால் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேசினார் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுடன் பஷீரை கட்சியிலிருந்து நீக்கினர். மீண்டும் மோடி ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதனால், மோடியை எதிர்த்தால் தான் தன்னுடைய பதவிக்கு ஆபத்து நேரும் என்பதால் பாஜகவை ஆதரித்தே செல்லவேண்டும் என நினைக்கிறார். ஏற்கெனவே மாநில அரசு நெருக்கடி கொடுக்கும்போது, மத்திய அரசையும் எதிர்க்க முடியாது என கருதுகிறார்.
மாநில அரசால் தமக்கு ஆபத்து ஏற்படும்போது மத்திய அரசின் மூலம் அதை தடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார். இந்த சூழலில் பாஜகவின் எதிர்ப்பும், சசிகலாவின் ஆதரவையும், ஒற்றை தலைமையையும் அன்வர் ராஜா கோருவதால் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். உண்மையான அதிமுகவின் நீண்டகால தொண்டர் அன்வர் ராஜா இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தன் தலைமைக்கு இணக்கமாக இருக்கமாட்டார் என அரசியல் கணக்கு போட்டு அவரை தூக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அன்வர் ராஜாவை திமுக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும். அவருக்கு அந்த கட்சி சரியாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்