தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை தொடர்ந்து, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது தூத்துக்குடி மாவட்டம்.
கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அணைகளுக்கு வரும் நீர்வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நீர்வரத்து அதிகமாகத்தான் உள்ளது என்பதால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனா நதி உள்ளிட்ட அணைகளுக்கு வரும் உள்நீர்வரத்து, அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவும் அங்கு கனமழை தொடர்ந்த காரணத்தால், அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு வரும் தண்ணீர், வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்சமயம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி நீர் தாமிரபரணி வழியாக கடலில் கலக்கிறது. இவையன்றி கனமழையால் வரும் வெள்ளநீர், தூத்துக்குடி மாவட்டம் மருதூர், அகரம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி, புன்னக்காயல் வழியாக கடலில் கலக்கிறது.
இவையன்றி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையினால் நீர்வரத்தும், வெளியேறும் நீரும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியின் நிகிலேசன் நகர், கதிர்வேல் நகர், புஷ்பா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அப்பகுதிகளில் மூட்டு அளவுக்கு மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசி பத்மநாபன் நம்மிடையே தெரிவிக்கையில், “கடந்த ஒரு மாதமாகவே எங்களது பகுதி இதே நிலைமையில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல எங்களது பகுதி வெள்ள நீரால் மிதக்கிறபோதும் எங்களது சொந்த செலவில்தான் டிராக்டரில் கரம்பை மண், கற்களை கொண்டு வந்து பாதை மேடாக்கி வெள்ளநீர் மட்டத்தை தணிப்போம். ஆனால் அதனையும் மூழ்கடிக்கும் நிலையில் தான் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும். இந்த நிலை தொடர்கதையாக நீடிப்பதை தவிர்க்க, அரசு தரப்பு இப்பகுதியை சீரமைக்க வேண்டும். எங்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள பாதிப்பின்போது தற்காலிக நடவடிக்கையாக மோட்டார் பம்புகள் வைத்து நீரை வெளியேற்றி விடுவார்கள். அதன் பின்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைத்து முறையாக வெள்ளநீர் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுப்பது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். ஆனால் அதிகாரிகள் யாரும் இதை செயல்படுத்துவது கிடையாது. இப்பகுதியில் ஏராளமான வசித்து வருவதால் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் நீரில் பாசி படர்ந்து தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்னர் வெள்ளநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
- ராஜன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்