திண்டுக்கல் மாவட்டம் கீழ்மலை பாச்சலூரில் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பது முதற்கட்ட உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என சிறுமியின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த கடந்த 15-ஆம் தேதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளியை ஒட்டியே சிறுமி கொலை செய்யப்பட்டிருந்ததால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கான எந்த தடயங்களோ, காயங்களோ சிறுமியின் உடலில் இல்லை என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உடல் உள்ளுறுப்பு மற்றும் ரத்த மாதிரிகள் வேதியியல் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் சேகரிக்கப்பட்ட முடி, துணிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைத்த பிறகே எவ்விதமான எரிபொருள் கொண்டு சிறுமிக்கு தீ வைக்கப்பட்டது என்பது தெரியவரும்.
சிறுமியின் மரணம் கொடைக்கானமல் மலை கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பூர்வீக கிராமமான மேல்மலை கூக்கால் மக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணாக்கரின் பெற்றோரிடம் பேசினர். அப்போது, உயிரிழந்த சிறுமியின் உறவினர் ஒருவர், அதிகாரிகளின் காலில் விழுந்து, சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமாறு கதறினார். சிறுமி இறப்புக்கான காரணம் தெரியவரும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதேபோல, மன்னவனூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் நீதி வேண்டி முழங்களும் எழுப்பினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்