முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு தாமதமாவதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய மருத்துவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டதாக இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முதுநிலை நீட் கலந்தாய்வை விரைவில் நடத்த வலியுறுத்தி மருத்துவர்கள் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரியிலிருந்து உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு பலரும் தடுப்பு காவலில் பிடித்து வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மருத்துவர்கள் பலர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் தடியடி நடத்தப்படவில்லை எனவும் 12 பேர் மட்டும் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய சாலையான BSZ marg சாலையை மருத்துவர்கள் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மறித்து பொதுமக்களுக்கு இன்னல் விளைவித்ததாகவும் காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ரோகித் மீனா அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 7 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் நேற்றிரவு மீண்டும் ஏராளமான மருத்துவர்கள் சரோஜினி நாயுடு காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டனர்.
சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மருத்துவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் காவல்நிலைய பகுதியிலேயே போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவதற்காக மருத்துவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இன்று மீண்டும் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்