மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை எட்டாக் கனியாக மாறிவிடுமோ? என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி தென் இந்தியாவின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. 224.24 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் மருத்துவமனைக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 45மாதங்களில் பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 36 மாதங்கள் ஆகியும் முதற்கட்டப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
அதே நேரத்தில் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்தியாவில் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பான் நிதி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.அடிக்கல் நாட்டப்பட்ட போது செய்யப்பட்ட மதிப்பீடு தற்போது கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் 2 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கால தாமதம் ஏற்பட்டால் இன்னும் திட்ட மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.விரைந்து பணிகளை முடித்து எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்