இந்தியா துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு என்றும் அதற்கு வேறு யாரும் சான்றிதழ் தரவேண்டியதில்லை என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சிலர் அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூண்டுதல் காரணமாகவும் இந்திய ஜனநாயகம் குறித்து விமர்சித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார். அண்மையில் இந்திய - அமெரிக்க கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, தெளிவாக கட்டமைக்கப்பட்டுள்ள தேசியவாதம் என்ற கருத்தாக்கத்திற்கு பதில் அண்மைக்காலமாக போலியான தேசியவாத கருத்தாக்கங்கள் பரவி வருவதாக பேசியிருந்தார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி., எட் மார்க்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு தென்படுவதாகவும், இது பாகுபாடுகளை வளர்த்து வன்முறைகளுக்கு வித்திடும் எனவும் கூறியிருந்தார். இதே நிகழ்ச்சியில் பேசிய மேலும் 3 அமெரிக்க எம்பிக்கள் இந்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பதில் வெளியாகியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்