பணம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த வழக்கில், கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹசனில் தனிப்படை காவல்துறையால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ராமகிருஷ்ணன், நாகேஷன், அதிமுக நிர்வாகி பண்டியராஜன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை அதிகாரி கணேஷ் தாஸ் 3 மணி நேரம் தனியாக விசாரணை நடத்தினார்.
பின்னர் அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டது. புகார் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்களையும் யார் யாரெல்லாம் வேலை வாங்கித்தரக் கோரி தங்களை அணுகினர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விசாரித்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 20 நாட்களாக எங்கெல்லாம் இருந்தார் யார் யாரெல்லாம் உதவியது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விடிய விடிய இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணை அதிகாரியைத் தொடர்ந்து மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேந்திர பாலஜிக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேரிடம் தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கர்நாடகாவில் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும்போது அவர் தப்ப முயன்றதாக கூறப்படும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறை, காரில் முழுமையாக சோதனை செய்தது. இதனைத்தொடர்ந்து ராஜேந்திரபாலாஜிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்