நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நிலைப்பாட்டை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. அந்தவகையில் இன்றைய முரசொலி நாளேட்டில், `மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும்; ஆனால் அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணரவேண்டும்’ என குறிப்பிட்டு ஆளுநரை சாடியுள்ளனர்.
`கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் முரசொலியில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் வெளியாகியுள்ள பிற தகவல்கள்: ``தமிழக ஆளுநர் ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லையை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து அரசியல் தட்ப வெட்பங்களை உணர்ந்து அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை. காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்கு பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர் அவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு தேவை, பல நேரங்களில் அந்த பாணி கைக்கொடுக்கும்; ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.
குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி, அவர் தமது பொறுப்புணராது தமிழக மக்கள் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும்போது அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது, சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணரவேண்டும். பல பிரச்னைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். அதிலே ஒன்று இருமொழிக் கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாமென்பது. ஆளுநர் ரவி, இதனை உணர்ந்து உரிய தகவல்களை மேலிடத்திற்கு தந்து ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்யவேண்டும்.
இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், `கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா’ எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புவகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இப்படியாக நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் ஆர். என். ரவி தனது குடியரசு தின செய்தியில் கூறியதற்காக, அவரை விமர்சித்து முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: வெளவால்களில் காணப்படும் நியோகோவ் வகை கொரோனா - சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்