புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில் நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
50 அடி உயரம் கொண்ட செங்குத்தான மரத்தில் விளக்கெண்ணெய், கிரீஸ், சோற்றுக்கற்றாழை சாறு ஆகியவை பூசப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. நான்கு அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரத்தின் உச்சியை எட்ட முயன்றனர். மரம் அதிகமாக வழுக்கியதால், மாலை 5 மணிக்கு தொடங்கிய போட்டி இரவு 10 மணி வரை நீடித்தது. இறுதியாக, வடகாடு மாங்காடு ஏவி பேரவை அணி வீரர்கள் 9 பேர் துணிச்சலாக ஒருவர் மீது ஒருவராக வழுக்கு மரத்தில் ஏறி உச்சியை அடையும் நிலையில், எட்டு பேர் வழுக்கியபடி கீழே விழுந்தனர்.
எனினும் ஒருவர் மட்டும் முயற்சியை கைவிடாமல் உச்சியை அடைந்து வெற்றிக் கொடியை நாட்டினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையும், வெற்றிக் கோப்பையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்