அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 20 முதல் 30 புதிய இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய அளவில் வளரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக பேசிய அவர், "நமது இளம் தொழில்முனைவோரின் திறன் மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது. ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப துறையில் குறைந்தது 20-30 புதிய இந்திய நிறுவனங்கள் அடுத்த 10-20 ஆண்டுகளில் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிதாக வளரும்.
ரிலையன்ஸ் 1 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற சுமார் 15 ஆண்டுகள் ஆனது. 10 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 30 ஆண்டுகள். 100 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 35 ஆண்டுகள். மேலும் 200 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற 38 ஆண்டுகளும் ஆனது. அனால், அடுத்த தலைமுறை இந்திய தொழில்முனைவோர் இதை பாதி நேரத்தில் சாதிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என தெரிவித்தார்
மேலும், "இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஏற்றுமதி 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்ததில் இருந்து தற்போது 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2030க்குள், அவை அரை டிரில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று நான் நம்புகிறேன். இதேபோல், இந்தியாவின் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் பசுமை எரிசக்தி ஏற்றுமதிகள் அடுத்த 20 ஆண்டுகளின் முடிவில் அரை டிரில்லியன் டாலர்களை செய்யும் திறனைக் கொண்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், ஐடி வல்லரசாக இந்தியா உருவானது போல, அடுத்த 20 ஆண்டுகளில், தொழில்நுட்பத்துடன் இணைந்து, ஆற்றல் மற்றும் வாழ்க்கை அறிவியலில் நாம் வல்லரசாக உருவெடுப்போம் என்று நான் நம்புகிறேன்.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், மேலும் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் மாறும். இது 2025 இல் நடக்குமா அல்லது 2027 இல் நடக்குமா அல்லது 2030 அல்லது 2032 இல் நடக்குமா என்பது பற்றி மட்டுமே நாம் வாதிட முடியும்.
ஐரோப்பாவின் 38,000 டாலருடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தனிநபர் வருமானம் இன்று 2,000 டாலராக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்துடன், அடுத்த 15-20 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் 10,000 டாலரை எட்டும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்