உத்தரப்பிரதேசத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் இன்று, 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 623 வேட்பாளர்கள் மூன்றாம் கட்ட தேர்தல் போட்டி களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் 2 கோடியே 15 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மூன்றாம் கட்ட தேர்தலுக்காக 16 மாவட்டங்களில் 25,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு எந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. கர்ஹால் தொகுதியில், மண்டி என்ற பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தனித்தனியாக பகிர்ந்தளிக்கப்பட்டன. தமிழகத்தைப் போன்று பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படாமல் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு சென்றனர்.
முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் களம் காணும் கர்ஹால் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அகிலேஷ் யாதவை தவிர்த்து மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சதீஷ்மஹானா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான லூயிஸ் குர்ஷித் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அசிம் அருண், லூயிஸ் குர்ஷித் மாநில அமைச்சர் ராம் நரேஷ் அக்னிகோத்ரி ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த 59 தொகுதிகளில் பாரதிய ஜனதா 49 இடங்களிலும், சமாஜ்வாதி 9 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
இதையும் படிக்க: "காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" என வாக்குகேட்ட பாஜக தலைவர் - வைரலான வீடியோவால் விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்