உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தங்கள் நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா நிராகரித்திருந்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச்சபையை கூட்டுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வழக்கம்போல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
ஐ.நா பொதுச்சபையை கூட்டுவது தனக்கு எதிரானது என்பதால் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டத்தை இன்று கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உறுப்புநாடுகள் அங்கீகரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஐ.நா பொதுச்சபையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
1950ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம் 10 முறை மட்டுமே நடந்துள்ளது. இதில் பெரும்பானாலான கூட்டங்கள் பாலஸ்தீன பிரச்னை தொடர்புடையவை. உக்ரைனில் இருந்து எல்லை கடந்து இந்தியர்களை மீட்கும் விவகாரத்தில் உள்ள சிக்கல்கள் உட்பட தற்போதைய களச் சூழல்களை கருத்தில்கொண்டே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என ஐ.நா பாதுகாப்பு அவையின் இந்தியப் பிரதிநிதி திருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்