Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செந்தில்பாலாஜி போட்ட வியூகம்: ‘அதிமுகவின் எஃகு கோட்டை’யை அசைத்த திமுக.. கோவை மேயர் யார்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பெருவாரியாக வெற்றி பெற்ற நிலையில், முதல்முறையாக மேயர் பதவியை அலங்கரிக்க உள்ளது திமுக.

தமிழ்நாட்டில் பெருநகர சென்னைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய மாநகராட்சி கோவை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை அதிக கவனம் பெற்றிருந்தது.

image

ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி மற்றும் 33 பேரூராட்சிகளைக் கொண்ட கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் திமுகவும், தங்களின் அசைக்க முடியாத கோட்டை என அறியப்படும் கோவையை மீண்டும் வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை களம் கண்டன.

கோவையைப் பொறுத்தவரையில் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அசுர பலமாக பார்க்கப்பட்டார். இதனால் அவரது வியூகங்களுக்கு முறியடிக்க அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கோவை மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்தது திமுக தலைமை. மறுபுறம் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியான வானதி ஸ்ரீனிவாசனும் கோவையில் செல்வாக்குடன் வலம் வந்ததால் திமுகவிற்கு பன்முனை சவால்கள் காத்திருந்தன.

image

தொடக்கத்தில் கோவை திமுகவைச் சேர்ந்தவர்கள் செந்தில் பாலாஜிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பேசப்பட்டது. இதையடுத்து தனது சொந்த ஊரைச் சேர்ந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கோவையில் களமிறக்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதற்கிடையே கோவையில் காலூன்றியே ஆக வேண்டிய வேட்கையில் இருந்த திமுக, கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் செந்தில் பாலாஜிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும், இல்லையேல் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறான சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் முடிவில் `கோவை எங்களின் எஃகு கோட்டை’ எனக் கூறிய அதிமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது திமுக. ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை திமுக பதிவு செய்துள்ளது. கோவையை பொறுத்தவரை வெள்ளலூர் பேரூராட்சி மட்டுமே அதிமுக வசம் சென்றுள்ளது.

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியின் கீழ் வரும் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனின் சட்டமன்ற தொகுதியான கோவை தெற்கின் கீழ் வரும் அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாநகராட்சியில் 76 வார்டுகளிலும், நகராட்சிகளில் 159 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 386 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாநகராட்சியில் அதிக வார்டுகளைக் கைப்பற்றி முதல்முறையாக மேயர் பதவியை திமுக பெற்று வரலாறு படைக்கவுள்ளது. ஒட்டுமொத்தமாக கொங்கு மண்டலத்தில் திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் அதிமுக, பாஜகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டமாக கூறப்படும் கோவையை திமுக தன்வசப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்தி: 'தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளோம்' - காங்கிரஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்