தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.
இந்தப் பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இவை தவிர பாமக, பாரதிய ஜனதா, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்துக் களம் காண்கின்றன.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 98 ஆயிரம் காவல்துறையினரும், 12 ஆயிரத்து 300 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்