உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் இரு நாடுகள் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி அதிகாலை முதல் உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. நாட்டை காப்பதற்காக உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்புகளும் தப்பவில்லை. உயிர் தப்பிப்பதற்காக உக்ரைன் மக்களும் அந்நாட்டிலுள்ள பிறநாட்டு மாணவர்களும் மக்களும் காற்றோட்டம் இல்லாத பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நுழைந்துள்ள ரஷ்ய படையினர், அந்நகரை முழுமையாக கைப்பற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை முன்னதாக நிராகரித்த உக்ரைன் அதிபர், தற்போது அதனை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முன் நிபந்தனைகள் எதுவுமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் இன்று காலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது. உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன்-ரஷ்யா போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்