இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது இன்று துவங்கி மே மாதம் 29ம் தேதி வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தபட்டு வந்த ஐபிஎல் தொடர், இந்த வருடம் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் இந்தியாவில் நடைபெறுகிறது. இருந்தபோதும் வழக்கத்தைபோல அல்லாமல், மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கவுள்ளன.
இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணியான குஜராத் டைடன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான், ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு 2 புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் ஐபிஎல் தொடரின் நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, குரூப் A, குரூப் B என்று இரு பிரிவுகளாக 10அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடைபெற்ற தொடர்களில் அதிக முறை இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பை கைப்பற்றிய தரவரிசை அடிப்படையில் அணிகளின் வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளதால் குரூப் A-வில் முதல் அணியாக உள்ளது.
இதுபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளதால் குருப் - ”B” பிரிவில் முதல் அணியாக இடம்பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரூ, டெல்லி, பஞ்சாப், லக்னோ, குஜராத் அணிகள் அடுத்தடுத்து இடத்தை பெற்றிருக்கிறது. இந்த தரவரிசை படி, குரூப்-”A”பிரிவில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, லக்னோ அணிகளும், குரூப் - “B”வில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
முந்தைய சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் அடுத்த சீசனின் முதல் போட்டியில் மோதுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்படி, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டன் பதவியை விட்டு விலகிய பிறகு தோனி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக ரவீந்திர ஜடேஜா தலைமையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலும் களமிறங்கும் முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்