Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகம் உச்சரிக்கும் பெயராய் மாறிய செலன்ஸ்கி

உக்ரைன் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் கூட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் புகழ் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், ராணுவ பலமிக்க ரஷ்யாவை துணிச்சலோடும் நம்பிக்கையோடும் எதிர்த்து நிற்பதுதான்.

தலைநகரை விட்டு போக மாட்டேன்; சரணடைய மாட்டேன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார்; உச்சக்கட்ட போர் சூழலிலும் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசுகிறார்; அரசு அதிகாரிகளோடும், அமைச்சர்களோடும், ராணுவ அதிகாரிகளோடும் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். இந்த 7 நாட்களில் செலன்ஸ்கியின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் உலகலாவிய கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த ஓர் விரைவுப் பார்வை இதோ..

நாள் 1

பிப்ரவரி 24, 2022, உலகிற்கு ஒரு சாதாரண நாளாக அமையவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கின. இதனால் உக்ரைன் மட்டுமின்றி உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவானது. நிலம், வான், கடல் வழியாக உக்ரைன் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்தது ரஷியப் படைகள்.

ரஷியாவின் போர் அறிவிப்பை அடுத்து, உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்தார். ‘’உக்ரைன் ராணுவம் தனது பணிகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என்று மக்களை ஆசுவாசப்படுத்தினார் செலன்ஸ்கி. மேலும் அவர், ‘‘உக்ரைன் மக்களும், அரசும் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் எங்களது நாடு, சுதந்திரம், வாழ்க்கை ஆகியவற்றை காக்க போராடுவோம். நீங்கள் எங்களை தாக்கும் போது எங்களது முகத்தை தான் பார்ப்பீர்கள். முதுகை அல்ல’’ என்று தில்லாக கூறினார். அதுமட்டுமல்லாமல் ரஷ்யப் படைகளை எதிர்த்து போராட உக்ரைன் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி தயார்படுத்தினார்.

நாள் 2

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மேலும் மேலும் அதிகரித்து வந்த சூழலில், உக்ரைன் படையினர் தொடர்ந்து தீரத்துடன் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொண்டு வந்தனர். அச்சமயத்தில் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யப் படையினரிடம் சரணடையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனால் உக்ரைன் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த செய்திகளை செலன்ஸ்கி மறுத்தார். இதுகுறித்து கீவ் நகரில் தெருவில் நின்றபடி ஒரு வீடியோவைப் பேசி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் செலன்ஸ்கி, ‘’நான் சரணடைய போவதாக வெளியான செய்திகள் போலியானவை, பொய்யானவை. ரஷ்யாவின் முதல் இலக்கு நான்தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில் தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யா என்னை வீழ்த்தி அரசியல் ரீதியாக உக்ரைனை ஆக்கிரமித்து ஆட்டுவிக்க நினைக்கிறது. ஆயுதங்களை நாங்கள் கீழே போட மாட்டோம். எங்களது நாட்டை காப்பாற்ற தொடர்ந்து போரிடுவோம்’’ என்றார் மனவுறுதியுடன்.

நாள் 3

ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதால், தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்க, செலன்ஸ்கியோ "சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல" என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, அந்த நாட்டு அதிபர் தப்பி ஓடினார். ஆனால் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யப் படைகளைப் பார்த்து கொஞ்சம் கூட பயப்படவில்லை. அதை விட முக்கியமாக மக்களோடு மக்களாக இருக்கிறார்.

நாள் 4

தலைநகர் கீவ் நகருக்கு அருகில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை ரஷ்யப் படைகள் தாக்கின. போரில் தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகவும் செலன்ஸ்கி தனது வேதனையை உலகிற்கு வெளிப்படுத்தினார். செலன்ஸ்கியின் உருக்கமான வீடியோக்கள் உலகம் முழுவதும் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரித்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அனுப்புவதாகக் கூறினார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் ராணுவ உதவி அளிக்க முன்வந்தன. போலந்து நாடு உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு தாராளமாக தஞ்சம் கொடுத்தது.

இதுமட்டுமல்லாது, சர்வதேச பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஸ்விஃப்ட் சேவையில் இருந்து ரஷ்யாவின் வங்கிகளை நீக்கி அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் உத்தரவிட்டன. 4-ஆம் நாள் முடிவில் ரஷ்ய அதிபர் தனது அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

நாள் 5

‘’உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும் அவ்வாறு உக்ரைன் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும்” என ரஷ்ய அதிபர் புடின் கூறினார். ஆனால் உக்ரைன் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து தீரத்துடன் போரை தொடர்ந்தார் செலன்ஸ்கி. தன்னை கொலை செய்ய கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றையும் செலன்ஸ்கிவெளியிட்டார்.

நாள் 6

ரஷ்ய ராணுவ நடவடிக்கை 6-வது நாளாக தொடர்ந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், "ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் துணை நிற்பதை நிரூபிக்க வேண்டும். எங்களை தனித்துவிட்டு போக மாட்டீர்கள் என நிரூபியுங்கள். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் மிகவும் வலுவாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார். செலன்ஸ்கியின் இந்த உரைக்கு பின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாள் 7

உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று செலன்ஸ்கி வலியுறுத்தினார். மேலும் அவர், ‘’நான் இங்கு தினமும் உக்ரைனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுக்கும் பணியை செய்கிறேன். மிஞ்சிய நேரத்தில் தூங்குகிறேன். உக்ரைன் எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று கேட்காதீர்கள். தாக்குப்பிடிப்பது அல்ல விஷயம். தேசத்துக்கான போராட்டம்தான் முக்கியம். இது எங்களின் தாய்நாடு. நாங்கள் அதைப் பாதுகாக்கும் பணியில் உள்ளோம்’’ என்றார் மன வலிமையுடன்.  

இதையும் படிக்க: இந்தியா வசமாகும் ரஷ்யாவின் தயாரிப்பு எஸ்-400 ஏவுகணை:கடுப்பாகும் அமெரிக்கா: காரணம் என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்