தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிரிக்கெட் விளையாட ஆசை என தெரிவித்தார்.
தேனியில் 'மேனகா மில்ஸ்' டிராபிக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை அணியும், திருவள்ளூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. இதில், இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி 49 ரன்கள் எடுத்தார்.
போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறும்போது, "தேனிக்கு முதன் முறையாக வந்திருக்கிறேன். இங்கு விக்கெட் மிகவும் அருமையாக உள்ளது. அணிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் கூட்டு முயற்சியுடன் விளையாடுகின்றன. தேனி மிகவும் அழகாக உள்ளது. தேனியின் உபசரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. நான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்.
தேனி கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் அருமையான இடமாக உள்ளது. எவ்வளவுதான் வெயில் அடித்தாலும் இங்கே வெயியே தெரியவில்லை. வீரர்கள் அனைவரும் அனுபவித்து விளையாடுகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிரிக்கெட் விளையாட எனக்கு ஆசை, அந்த வகையில் தேனியில் கிரிக்கெட் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்