211 ரன்கள் இமாலய இலக்கை எட்ட முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசியது. ராஜஸ்தான் அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இன்னிங்ஸை துவக்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பட்லர் 35 ரன்கள் குவித்த நிலையில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட்டானார். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 55 ரன்கள் குவித்தார்.
தேவ்தத் படிக்கலும் மட்டையை நாலாப்புறமும் சுழற்றி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த போதிலும், அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்புணர்ந்து ஆடியதால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்தபடி ராக்கெட் வேகத்தில் முன்னேறியது ராஜஸ்தான். இறுதியாக ஹெட்மயர் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்து தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியபோது துவக்கமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஓப்பனர்களாக களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களில் அவுட்டாக, மற்றொரு ஓப்பனர் அபிஷேக் ஷர்மா 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவரும் டக் அவுட் ஆக 29 ரன்கள் குவிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது சன்ரைசர்ஸ். அடுத்து வந்த அப்துல் சமத் சாஹல் பந்துவீச்சில் ஒற்றை இலக்கில் அவுட்டானர். மோசமான ஸ்கோரில் ஆல் அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐடன் மார்க்ரம் மற்றும் ரொமாரியோ ஷெபர்ட் நிலைத்து விளையாடத் துவங்கினர்.
ஐடன் மார்க்ரம் அரைசதம் விளாசி அவுட்டாக, ஷெபர்ட் 24 ரன்கள் குவித்து சாஹல் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டினார். 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 40 ரன்கள் குவித்தார் சுந்தர். இறுதியாக இலக்கை எட்ட முடியாமல் 149 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சன்ரைசரஸ். மிக மோசமான தோல்வியை சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ். அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலிடத்தை பிடித்து விட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்