Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நள்ளிரவு என்கவுண்ட்டர் - காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீரில் நேற்று நள்ளிரவு நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

image

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மிட்ரிகாம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு நேற்று இரவு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வணிக வளாகக் கட்டடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தக் கட்டடத்தை சுற்றி தங்கியிருந்த பொதுமக்களை அங்கிருந்து வேறு பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். பின்னர், தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர்.

image

ஆனால், இதனை ஏற்காத தீவிவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், அவர்களின் பெயர் அய்சாஸ் அஃபீஸ் (25) மற்றும் சாஹிப் அயூப் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் அல் - பாத்ர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அண்மைக்காலமாக வெளிமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளநர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 4 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்